காவ்யா சொன்னதால் அந்த எண்ணுக்கு
அழைத்துவிட்டாலும் அரவிந்தன் மனதில் மோனாவை பற்றிய அச்சம் இல்லாமலில்லை. நியூயார்க்
ஆஃபீசில் கேன்டீனில் முதன் முதலில் தன் விருப்பத்தை அவள் சொன்னது அவன் நினைவுகளில்
வந்து போனது.
மோனா டெல்லியில் பிறந்து வளர்ந்த, அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் ஒரே செல்ல பெண்.
அவளது அழகும் படிப்பும் சற்றே கர்வத்தையும் தந்துவிட்டிருக்க, எப்போதும் கண்களில் சற்று அலட்சியமும் நுனிநாக்கு
ஆங்கிலமுமாய் கூட வேலை பார்ப்பவர்களை சற்று எட்டிதான் இருக்க வைத்திருந்தது.
ஒரு சிலரை தவிர மற்ற ஆண்களின் கண்கள்
ரகசியமாய் தன்னை அளக்கும்போது, அரவிந்தனின் கண்ணியமும் அவனது வசீகரமும் அவளை ஈர்க்கத்தான்
செய்தது. அவள் வேலையில் சேர்ந்ததும் அவளுக்கு
ID கார்ட் வாங்குவது முதல், லேப்டாப் ஆர்டர் செய்து வரவைத்ததது, பேங்க் அக்கௌன்ட் ஓபன்
செய்து கொடுத்தது, கிரெடிட் கார்டு அப்ளை செய்தது, தங்குமிடம் வசதி செய்து கொடுத்தது
என்று அனைத்து உதவிகளையும் ரகு சொன்னத்தின் பேரில் செய்தாலும் தேவைக்கு மேல் எதுவும்
பேசாது, அவளுக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் செய்து கொடுத்தவன் மேல் அவளையுமறியாமல்
மரியாதையும் கூடவே காதலும் பிறந்தது.
படிக்கும் காலத்திலிருந்தே ஆண்களும்
நண்பர்களாக இருந்த போதிலும் யாரிடமும் தோணாத ஒரு உணர்வு அரவிந்தனிடம் பேசும்போதும்
பழகும்போதும் இருப்பதாக உணர்ந்தாள். தன் விருப்பத்திற்கு தன் பெற்றோரும், தன்னைப்போல அறிவான அழகான பெண்ணுக்கு
அரவிந்தனும் மறுப்பு சொல்ல மாட்டார்கள் என்ற அசையாத நம்பிக்கையோடு பழகிய ஒரு மாதத்திலேயே
தன் விருப்பத்தை அவனிடம் சட்டென்று ஒருநாள் போட்டு உடைத்தாள்.
முதலில் அதிர்ந்தாலும் பின்னர் தன்
முடிவை அழுத்தமாக அதே சமயம் அவள் மனம் நோகாமல் எடுத்து சொன்னவன் அவளது கண்களில் தெரிந்த
ஆத்திரத்தை கண்டதும் ஆடி போனான்.
"அரவிந்த், இதுவரைக்கும் எத்தனை பேர் என்ன ப்ரொபோஸ்
பண்ணியிருப்பாங்க உங்களுக்கு தெரியுமா? இப்ப கூட நான் ஓகேன்னு ஒரு வார்த்தை சொன்னா
போதும்.. டெல்லில எத்தனை ஹை கிளாஸ் families அவங்க பசங்களுக்கு என்னை கேட்டு என் பேரன்ட்ஸ்க்கு
தினமும் போன் பண்றாங்க தெரியுமா? யாருக்கும் ஓகே சொல்லாம உங்களை ப்ரொபோஸ் பண்றேன்னா
எனக்கு உங்களை அவ்வளவு பிடிச்சிருக்குன்னு ஏன் உங்களுக்கு புரியல? இந்த காலத்துல வந்து
மாமா பொண்ண லவ் பண்றேன் அத்தை பொண்ண லவ் பண்றேன்னு.. உங்க லைப் ஸ்டைலுக்கு எப்படி அந்த
பொண்ணு ஒத்து வருவா.. ப்ராக்டிகலா யோசிச்சி பாருங்க " என்று வார்த்தைகளில் அனல் அடிக்க அவள் பேசியது இன்னமும்
அவன் காதில் ஒலித்தது.
பொறுமையை இழந்தவன் "மோனா.. திஸ்
ஐஸ் யுவர் லிமிட்.. என் லைஃப் பத்தி நீங்க கவலைப்படவேணாம்..என் லைஃப் ஸ்டைல்க்கு யாரு
ஒத்துவருவாங்கன்னு நீங்க டிசைட் பண்ணதேவையில்லை.. and I love Kavya more than
anything in the world " என்றதும் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வர "என்ன
அழவச்சிட்டு நீ எப்படி நிம்மதியா இருக்கபோறேன்னு நானும் பாக்குறேன்" என்று விருட்டென்று
எழுந்து போனாள்.
அதற்கடுத்த இரண்டு நாட்களில் அவள்
அலுவலகம் வராமலிருக்க, சற்று கலக்கமானவன் அவளது போனுக்கு அழைத்தபோதும் எதிர்முனையில்
எவ்வித பதிலும் இல்லை. கோபத்தில் பேசினாலும் அவளது மனம் புண்படுமாறு தான் பேசியது தவறு
என உணர்ந்து, அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு திரும்பவும் பொறுமையாக எடுத்துசொல்லவேண்டும்
என்று நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு ரகுவிடமிருந்து வந்த போன் கால் அதிர்ச்சியை கொடுத்தது.
"ஹே அரவிந்த் .. மேட்டர் கொஞ்சம்
சீரியஸ் .. என்றவன் தயங்கியபடியே “ மோனா நேத்தெல்லாம் ரொம்ப depressed ஆ இருந்திருக்கா..
ஷோபாகிட்ட போன்ல அழுதுகிட்டே அரவிந்த் ரொம்ப hurt பண்ணிட்டாருன்னு ஏதோதோ சொல்லியிருக்கா..
நேத்து நைட் ஸ்லீப்பிங் பில்ஸ் நெறய சாப்பிட்டு மயக்கமாகியிருக்கா.. நல்லவேளை.. அவளோட
ரூம்மேட் பாத்து 911 க்கு கால் பண்ணிட்டாங்க…. Treatment பண்ணி அவளை காப்பாத்திட்டாங்க.. இப்போதான்
ஹாஸ்பிடல்ல இருந்து எனக்கு கால் வந்திச்சி.. இப்போ ஷி ஐஸ் ஓகே ..but police enquiry ல உன் பேரை
சொல்லிட்டா it is going to be very serious.. நான் ஆல்ரெடி இந்தியால சீனியர் மேனேஜர்கிட்ட
பேசிட்டேன்.. incase அப்படி ஏதாவது problem
வந்தா கூட manage பண்ணிக்கலாம்.. உன்னைப்பத்தி நல்லா தெரிஞ்சதால company support உனக்கு இருக்கு.. நானும்
ஷோபாவும் உன்னை பிக்கப் பண்ண வந்திட்டு இருக்கோம்.. நேர்ல போய் அவகிட்ட பேசி எதுவும்
issue ஆகாம பாத்துக்குவோம்… be ready “ என்று போனை வைத்ததும் அதிர்ச்சியில் ஒரு வினாடி
விக்கித்து போனாலும் என்ன ஆனாலும் சரிதான்.. தன் மீது தவறு இல்லாதபோது தான் ஏன் கலங்கவேண்டும்
என்று தீர்மானித்தவன் அவர்களோடு சென்று மோனாவை பார்த்தான். அவர்களோடு பேசியபடியே கண்களில்
ஒருவித அலட்சியத்தோடு அரவிந்தனை "பார்த்தாயா.. உன்னை எப்படி அலறி அடித்து ஓடி
வரவைத்தேன்" என்ற தொனியில் பார்த்தாள்.
ரகுவின் மனைவி ஷோபாவும் டெல்லியை
சேர்ந்தவள் என்பதால் மோனாவும் அவளும் தோழிகளாகியிருந்தனர். பலவித பேச்சுவார்த்தைக்கு
பின்னரும் அரவிந்தன் காவ்யா தான் தன் வாழ்க்கை என்று உறுதியாக இருக்க, ரகு தம்பதியினர்
மோனாவின் பெற்றோருடன் பேசி அவளை நல்லபடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
இவையனைத்தும் மின்னல் போல அவன் நினைவில்
வந்துபோக, நெடுநேர அழைப்பிற்கு பின் எதிர்முனையில் "ஹலோ" என்று பெண்ணின்
குரல் கேட்டது. தயக்கமாக அரவிந்த் " ஹலோ .. நான் அரவிந்த் பேசுறேன்" என்றதும்
"ஹே அரவிந்த், நான் ஷோபா பேசுறேன்..How are you? " என்று சினேகமாக
அவள் பேசவும் "oh.. Hai Mrs. Raghu..” என்றுவிட்டு "இந்த நம்பர் .." என்று இழுத்தான்.
என்ன நடந்திருக்கும் என்று சட்டென்று
ஊகித்தவள் "ஓ அதுவா.. இது மோனாக்கு நான் வாங்கி கொடுத்த நம்பர் .. அவ இந்தியா
போனதும் நான்தான் பர்சனல் நம்பர் ஆ யூஸ் பண்ணிட்டு இருக்கேன்.. இப்போ she has
different number “ என்றவள் "ஓகே நான்
எதுக்கு கால் பண்ணேன் தெரியுமா.. இன்னைக்கு ஆகாஷுக்கு பர்த் டே.. ஈவினிங் சின்னதா பார்ட்டி
வச்சிருக்கோம்.. சோ கண்டிப்பா ரெண்டு பேரும் வந்துடுங்க.. அப்படியே உங்க ஒய்ப்பையும்
நாங்க பார்த்த மாதிரி இருக்கும்.." என்றதும் மனம் சிறிது நிம்மதி அடைய "OK
Mrs. Raghu .. நாங்க வந்திடறோம்..thanks for inviting us " என்று
விட்டு போனை வைத்தான்.
அரவிந்த் பேசி முடிக்கும் வரை அவனையே
பார்த்துக்கொண்டிருந்தவளின் மனதிலும் சிறிது கலக்கம் இருக்கத்தான் செய்தது. பேசுவது
ஷோபா என்பது புரிந்ததும் கொஞ்சம் நிம்மதியானவள், அவன் போனை வைத்ததுடன் "என்ன அத்தான்..
ரகு அண்ணா ஒய்ப்பா? " என்றாள்.
"ஹ்ம்ம் ஆமா.. நல்ல வேளை.. மோனா
இல்ல..அவ நம்பரை ஷோபா யூஸ் பண்றாங்க போல.. ரகு பையனுக்கு இன்னைக்கு பர்த்டேவாம்.. ஈவினிங் பார்ட்டிக்கு நம்மள இன்வைட் பண்ணாங்க.. போலாமா..
எப்படியும் எங்க டீம்ல எல்லாரும் வருவாங்க.. உனக்கும் எல்லாரையுமே பாத்த மாதிரி இருக்கும்..மோனாவும்
கண்டிப்பா வருவா.. நீ அவளையும் பாத்த மாதிரி இருக்கும்" என்றான் குறும்பாக அவளை
பார்த்தபடியே.
"நான் ஏன் அவங்கள பார்க்கணும்
" என்று பொய்க்கோபத்துடன் அவள் வாய் சொன்னாலும் அவள் மனதில் தன் அத்தானுக்காக
உயிரை விட துணிந்தவளை பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் இருந்ததை அறிந்தவனாய் "ஹே உன்ன
பத்தி உனக்கு தெரியாதது கூட எனக்கு தெரியும்.. " என்று அவளை பின்புறமாய் அணைத்துக்கொண்டான்.
கழுத்தை சுற்றி அணைத்துக்கொண்ட கணவனின்
கைகளை பற்றிகொண்டவள் "அப்படியா.. இப்போ
நான் என்ன நினைக்கிறேன் சொல்லுங்க பாப்போம்" என்றாள். "சொல்லவா.. சொல்லிடுவேன்..
சொல்லிடுவேன்.. " என்றவன் அவள் காதோரமாய் "இப்போ அத்தானை பார்த்து I
love youன்னு சொல்லனும்னு நினைக்கிற.. கரெக்ட் ஆ" என்றான் கிசுகிசுப்பாய்.
காதலில் மனம் கிறங்க கண்களை மூடிகொண்டு நாணசிரிப்புடன் "கரெக்ட் தான் அத்தான்
" என்றவளை " நான் இப்போ என்ன நினைக்கிறேன் தெரியுமா .. " என்று மயக்கும்
குரலில் சொன்னவன் அவளின் காதுமடல்களில் சூடான முத்தங்களை பதித்தான்.
மாலை ஆறு மணியளவில் அரவிந்தன்
கிளம்பி ஷோபாவில் அமர்ந்தபடி விவேக்கிடம் போனில் பேசிக்கொண்டிருக்க, காவ்யா மிகவும்
சிரத்தையோடு பெட்ரூமில் கிளம்பிக்கொண்டிருந்தாள். அதுவரை அருகிலிருந்து சீண்டிக்கொண்டிருந்தவனை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி, கவனமாக அலங்கரித்துக்கொண்டிருந்தாள்.
அமெரிக்கா வந்த பிறகு முதல் பார்ட்டி
என்பதாலும், அரவிந்தனோடு வேலை பார்ப்பவர்களையும்
அவர்களின் குடும்பத்தாரையும் முதன் முதலில் பார்க்கப்போவதாலும் புடவையில் வருவது
என முடிவுசெய்து அரவிந்தனிடம் கேட்க, "உனக்கு comfortable ஆ இருந்தா saree ஓகேடா
.. அதுவில்லாம நீ எது போட்டாலும் அழகா இருப்ப.. " என்று ஆரம்பித்து விட்டான்.
அரவிந்தனின் சர்ட்க்கு பொருத்தமாக
அழகிய பர்பிள் நிற ஆர்கன்சா புடவையும் அதன் பார்டருக்கு பொருத்தமாக அழகிய வேலைப்பாடுகள்
நிறைந்த அடர் பிங்க் நிற பிளவுசும் அணிந்து, பிரெஞ்சு பிரைடும் காதில் புதிய டிசைனில்
பெரிய ஜிமிக்கியுமாக தேவதையாய் பளிச்சென்று கிளம்பி வந்தாள்.
அவளை பார்த்ததும், அவசரமாக பை சொல்லி
போனை வைத்தவன் மனைவியின் அழகில் சொக்கித்தான் போனான். "ஹே காவ்யா, எவ்ளோ அழகா
இருக்க தெரியுமா.. கொல்றடி என்னை" என்றபடியே அவளது அலங்காரம் கலையாமல் மெலிதாய்
அணைத்து முத்தமிட்டான். கணவனின் பாராட்டுதலில் முகத்தில் பெருமை பொங்க "ஹ்ம்ம்
அப்பறம்.. இவ்ளோ ஹாண்ட்ஷமான உங்களுக்கு கொஞ்சமாவது மேட்ச் ஆகணும்ல.." என்றபடியே
கணவனின் சர்ட்டை சரிசெய்தவள் "போகலாம் அத்தான்.. நான் ரெடி" என்றாள்.
"ஹ்ம்ம் கண்டிப்பா போகணுமா..
இப்படியே உட்கார்ந்து பேசிட்டே இருக்கலாமே " என்றவனை பொய்கண்டிப்புடன் "அத்தான்..
விளையாடாதீங்க.. ஏற்கனவே லேட்.. போலாம் வாங்க " என்று சிணுங்கியவளை பார்த்து "ஓகே ஓகே.. lets
go " என்று சிரித்தபடியே கார்ச்சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
வீட்டிலிருந்து அரைமணி நேர பயணத்தில்
அந்த அழகிய குடியிருப்பு பகுதியில் உள்ள ரகுவின் வீட்டை அடைந்தனர். வரிசையாக அணிவகுத்து
நின்ற மாளிகை போன்ற வீடுகளை பார்த்ததும் "வாவ் அத்தான்.. அமெரிக்கால வீடெல்லாம்
அபார்ட்மெண்ட் டைப்பிலதான் இருக்கும்னு நெனச்சேன்.. இந்த கம்யூனிட்டி அழகா இருக்கு
அத்தான்.. வீடெல்லாம் பாக்க நம்ம தாத்தா வீடு மாதிரி இருக்குல்ல" என்று ஆச்சர்யாமானாள்.
"ஹ்ம்ம் ஆமாடா.. நீ மட்டும்
இங்க செட்டில் ஆக ஓகேன்னு சொல்லு.. ரகு வீட்டு பக்கத்துலயே இதே மாதிரி வாங்கிடலாம்
" என்றான்.
அவசரமாக "இல்ல அத்தான்.. நாம
இதே மாதிரி ஆனா இந்தியால வாங்குவோம்..இப்போ நம்ம ரெண்டு பேருக்கு நம்ம வீடே ரொம்ப பெருசுதான் " என்று சொல்லியபடியே காரிலிருந்து இறங்கியவள்
புடவையை சரிசெய்து கொண்டாள்.
வரும் வழியில் வாங்கிக்கொண்ட கிப்ட்களை காவ்யா எடுத்துக்கொள்ள, ஜோடியாக இருவரும்
வீட்டினுள்ளே நுழைந்தனர். வீடு முழுதும் அலங்கார விளக்குகளால் அலங்கரிப்பட்டிருக்க,
குழந்தைகள் அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருந்தனர். வாசலிலேயே அவர்களை பார்த்த ரகு, மனைவியை
அழைக்க, தம்பதியராய் இருவரும் அரவிந்தனையும் காவ்யாவையும் வரவேற்றனர். காவ்யாவின் அழகில்
சற்றே தடுமாறிய ஷோபா நாற்பதின் ஆரம்பத்தில் படிப்புகளையோடு ஸ்லீவ்லெஸ் பிளவுசும் லைட்
வெயிட் பட்டுபுடவையுமாய் சிரித்தமுகத்தோடு வரவேற்றாள்.
"ஹாய் ஹண்ட்ஸம்" என்று
அரவிந்தனை வரவேற்றவள் "Hello காவ்யா
.. come on in..You know what.. you look soo pretty" என்று அவளை கைகளை பிடித்து
உள்ளே அழைத்துச்சென்றாள். நட்போடு சிரித்துக்கொண்ட ரகுவை பார்த்ததும் காவ்யாவுக்கு
அரவிந்தன் "ரகு எனக்கு அண்ணன் மாதிரி" என்று சொல்வது
நினைவுக்கு வந்ததும் "அத்தான் சொல்வது சரிதான்" என்று எண்ணிக்கொண்டு
சிரித்தவாறே உள்ளே சென்றாள்.
ஏற்கனவே வந்திருந்த மற்ற நண்பர்களையும்
அவர்களது மனைவிகளையும் காவ்யாவுக்கு ஷோபா அறிமுகப்படுத்த, காவ்யாவின் கண்களோ அவளையுமறியாமல்
மோனாவை தேடின.
ரகுவின் மூன்று வயது குழந்தையை தூக்கிக்கொண்டு
உள்ளறையில் இருந்து வந்த அந்த நவ நாகரிகமான பெண்ணை கண்டதும் மோனவாகத்தான் இருக்கவேண்டுமென்று
அவள் நினைத்த அதேநேரத்தில் ஷோபாவும் "Kavya, this is Mona.. and Mona this is
Aravind’s wife Kavya "என்று தயக்கத்தோடு சொல்லி முடித்தாள்.
ஒரு வினாடி காவ்யாவை வைத்த கண் வாங்காமல்
பார்த்தவளுக்கு அரவிந்தன் ஏன் தன்னை மறுத்தான்
என்று புரிந்தது. மாமன் மகள் என்றதும் எதோ படிக்காத கிராமத்து பெண்ணாக இருப்பாள் என்று
நினத்தவளுக்கு வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதையைப்போல, அவனுக்கு இணையான உயரத்துடனும்
படிப்பும் பண்பும் தந்த கூடுதல் அழகுடனும் உயர் குடும்பத்தில் வளர்ந்த மிடுக்குடனும்
அவனருகே நின்றவளை மற்ற விருந்தினர்கள்போல தானும் மெய்மறந்து ரசிக்க ஆரம்பித்தாள்.