Sunday, March 28, 2021

உன்னிடம் மயங்குகிறேன் - 15

 

 

அரைமணி நேரத்தில் வீடு திரும்பியவன் அவளது முகத்தை நேருக்குநேர் காணும் சக்தியில்லாமல் "காவ்யா.. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்" என்று குளியறைக்குள் புகுந்தான்.

அவன் வெளியே வரும்வரை காத்திருந்தவள்  "இப்போ திலீப் அம்மா எப்படி இருக்காங்க அத்தான்?" என்று எதுவும் தெரியாதவள் போல் கேட்டதும் கண்கள் சற்றே கலங்க அதற்குமேல் அவளிடம் பொய் சொல்லும் சக்தி இன்றி அவளை இறுக அணைத்தவாறு நடந்ததை முழுதும் சொல்லி முடித்தான். தன் அப்பா தங்கள் ஜாதகத்தில் உள்ள குறை பற்றி சொன்னதையும் சொல்லிமுடித்தான்.

"எங்க நான் இந்த நைட் டைம்ல  மோனாக்கு ஹெல்ப் பண்ண போறது உனக்கு பிடிக்காம நமக்குள்ள பிரச்னை வந்திருமோன்னு தான் பொய் சொல்லிட்டு போனேன்டா.. ஆனா இந்த சின்ன பொய் என்னை உறுத்தி எடுக்குது.. நீ என்னை பத்தி என்னை நினைச்சாலும் சரி ஆனா நான் உனக்கு உண்மையா இருக்கனும்ன்னு தான் இப்போ எல்லாத்தையும் கொட்டிட்டேன்.. என்னை மன்னிச்சுடு.." என்றான்.

அவன் குற்றஉணர்ச்சியில் பேசியதை தாளமாட்டாமல்  "அத்தான் ப்ளீஸ் நீங்கதான் என்னை மன்னிக்கணும். அந்த ஹோட்டல் ரூம்ல உங்க குரலை கேட்டதும் நான் ஏன் அழுதேன்? அதுக்கு எதாவது காரணம் இருக்கும்னு நம்பாம எனக்கு எதுக்கு அழுகை வந்தது..அப்போ எனக்கு உங்க மேல இருக்குற நம்பிக்கை குறைஞ்சி போயிடிச்சா? அத நெனச்சி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அத்தான் " என்றவாறு மோனா கால் செய்தது, அவள் லைனில் இருக்கும்போது அவர்கள் இருவரும் பேசியது என அனைத்தும் சொல்லி முடித்தாள்.

 

"இட் ஐஸ் ஓகே டா. இதுக்கெல்லாம் காரணம் நான்தானே.. நான் உன்கிட்ட உண்மையை சொல்லிட்டு போயிருந்தேன்னா நீ யாரு என்ன சொன்னாலும் நம்பியிருக்க மாட்ட.. ஆனா எனக்கு அப்பா சொன்னது மனசுல இருந்ததால அப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டேன்" என்றான்.

"அத்தான்.. நானும் ஒரு உண்மையை உங்ககிட்ட சொல்லணும்.. மாமா உங்ககிட்ட சொன்ன அதே விஷயத்தை அப்பா என்கிட்டயும் சொல்லிட்டாரு.. நான் உங்களுக்கு தெரிய வேணாம்.. தெரிஞ்சா வருத்தப்படுவீங்கன்னு நெனச்சேன்.. நீங்களும் எனக்கு தெரிஞ்சா வருத்தப்படுவேன்னு நெனைச்சிருக்கீங்க. பரவாயில்ல அத்தான்.. இந்த சம்பவத்துனால நம்ம ரெண்டு பேருக்கும் உண்மை தெரியும்னு நமக்கு தெரிஞ்சிருச்சி.. அதுவும் இல்லாம ஜாதகபொருத்தத்துக்கு மேல கடவுள்ன்னு ஒண்ணு இருக்கு.. நம்ம ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்குற காதலும் நம்பிக்கையும் அந்த கடவுளுக்கு சமமா பரிசுத்தமானது.. நம்மள இந்த ஜாதக குறை எதுவும்  பண்ணாது அத்தான்” என்று சொல்லியவாறே அன்புடன் அவன் நெஞ்சில் தஞ்சமடைந்தாள் காவ்யா. அவளை நெஞ்சார அணைத்துக்கொண்டான் அரவிந்தன்.

 

உன்னிடம் மயங்குகிறேன் - 14

 

 

மோனா வீட்டிலிருந்து இருபது நிமிடங்களில் அரவிந்த் பார்த்திருந்த ஹோட்டல் இருந்தது. காரை பார்க் செய்துவிட்டு ரிசப்ஷனில் வந்து அவளுக்கான அறையை புக் செய்துவிட்டு அறையின் சாவியை அவள் கைகளில் கொடுத்தவன், எதோ யோசனையுடன் "மோனா.. நானும் வரேன் வா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும். " என்றதும் மனதோரத்தில் ஒரு மகிழ்ச்சி எட்டிப்பார்க்க "வா அரவிந்த்.. " என்று முன்னால் சென்றாள்.

அந்த 3 ஸ்டார் ஹோட்டலின் விஸ்தீரமான அறையை திறந்ததும் ரம்மியமான ஒரு மனம் கமழ, அங்கிருந்த ஓர் சோபாவை காட்டி "உட்காரு.. அரவிந்த்" என்றாள். "ஒரு நிமிஷம்.. ரெஸ்ட்ரூமை உஸ் பண்ணிட்டு வரேன்" என்று அவன் சென்றதும் மோனாவின் மனம் பலவாறு யோசிக்க தொடங்கியது.. என்ன ஆயிற்று இந்த அரவிந்துக்கு.. இந்த அர்த்த ராத்திரியில் என்கூட வந்தவன் இப்போது அரைக்கும் வந்திருக்கிறான்.. சற்றே நேரம் வரை எரிந்து விழுந்தவன் ஏன் இப்போது கனிவுடன் நடந்து கொள்கிறான்.. என் திருமண வாழ்க்கையை பற்றி சொன்னதும் இரக்கப்பட்டு மனம் மாறிவிட்டானா? இது சரியா இல்லை தவறா? எதுவாக இருந்தாலும் காவ்யா அன்று மார் தட்டி கொண்டாளே.. அவள்தான் அரவிந்தன் இதயத்தில் குடியிருக்கும் மகாராணி அது இதுவென்று.. இப்போது அவள் கணவனின் வண்டவாளம் இன்னும் சற்று நேரத்தில் தெரிய போகிறது.. அவன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்ட போகிறான். என்று நினைத்தவள் சட்டென்று அவளது போனை எடுத்து காவ்யாவின் நமபருக்கு வாட்சப்பில் மெசேஜ் செய்தாள்.."காவ்யா.. இது மோனா.. உன் காதல் கணவன் இப்போது என்னோடு.. " என்று அனுப்பியதும் அடுத்த செகண்டில் "வாட்?" என்று அனுப்பியிருந்தாள் காவ்யா. நம்பவில்லையென்றால் நான் போன் செய்து உன்னை லைனில் வைக்கிறேன்.. நீ மியூட் செய்துவிட்டு லைனில் இரு" என்று கால் செய்துவிட்டு போனை ஒரு டேபிளில்  அவன் கண்ணில் படாமல் வைத்தாள்.

ஒன்றும் புரியாதவளாக விழித்த காவ்யா இவள் என்ன சொல்கிறாள்.. எப்படி என் போன் நம்பர் இவளுக்கு தெரியும்? என்று பலவாறு குழப்பிக்கொண்டு லைனில் காத்திருந்தாள்.

ஐந்து நிமிடங்களில் வெளியே வந்தவன் மோனாவை பார்த்து "மோனா ரூம் உனக்கு ஓகே தானே " என்று கேட்டதும் அது அரவிந்த் குரல்தான் என்று தெரிந்து காவ்யாவின் இதயம் ஒரு நொடி நின்று போனதுபோல் ஆனது.

மோனா " இட் ஐஸ் வெரி குட் அரவிந்த்.. ரொம்ப தேங்க்ஸ்! நான் கூப்பிட்டதும் வந்ததுக்கு.. எனக்கு ஏதாவதுன்னா உன்னால தாங்க முடியாதுன்னு எனக்கு தெரியும்.. உன்னை எனக்கு பிடிக்க ஆரம்பிச்சதே உன்னோட இந்த caring natureகாகத்தானே?” என்று வேண்டுமென்றே காவ்யாவுக்கு கேட்கும்படி அழுத்தி சொன்னாள்.

கண்களில் நீர் முட்டிக்கொண்டு வர மிகவும் பிரயத்தனப்பட்டு போனை காதில் வைத்து விழாமல் பிடித்திருந்தாள் காவ்யா.

"அப்பறம் அரவிந்த் எதுக்கு ரூம்க்கு வரேன்னு பிடிவாதமா வந்த? எங்கிட்ட எதாவது பேசணுமா " என்று குழைவை வரவழைத்துக்கொண்டு கேட்டதும் சற்றே எரிச்சலடைந்தாலும் தன்னால் அவளது வாழ்க்கையை கேளிவிக்குறியாய் ஆக்கிக்கொண்டவளை பார்த்து அரவிந்தனுக்கு பாவமாகாத்தான் இருந்தது.

"மோனா.. இப்படி உட்கார்.. உன்கிட்ட பேசணும் தான்.. ஆனா நீ நினைக்கிற மாதிரி இல்ல.. நீ பண்ண பைத்தியக்காரதனத்துக்கு அப்பறம் உன்கிட்ட தனியா பேச எனக்கு சந்தர்ப்பமே கிடைக்கல.. இப்போதான் கிடைச்சிருக்கு.. அதான் நானும் ரூமுக்கு வரேன்னு சொன்னேன். மொதல்ல ஒண்ணு நல்ல புரிஞ்சிக்கோ.. ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருந்தாதான் அது உண்மையான காதல்.. யாரையும் போர்ஸ் பண்ணி காதலிக்க வைக்க முடியாது.. நானும் காவ்யாவும் ஒருத்தரயொருத்தர் ரொம்ப ஆழமா காதலிக்கிறோம்.. பிராங்கா  சொல்லணும்னா ஒருவேளை நீ என்னை கம்பெல் பண்ணி  என்னை கல்யாணம் பண்ணியிருந்தாலும் என் மனசு காவ்யாவைதான் நினைச்சிட்டு இருந்திருக்கும்.. ஊர் உலகத்துக்காக உனக்கு புருஷனா இருந்தாலும் உனக்கு உண்மையா என்னால இருந்திருக்க முடியாது..  இப்போகூட அவகிட்ட பொய் சொல்லிட்டு தான் உனக்கு ஹெல்ப் பண்ண வந்தேன்.. அது உன்மேல உள்ள காதலால் இல்ல.. நீயும் காவ்யா மாதிரி ஒரு பொண்ணு.. நீ இந்த மாதிரி டெத் பாத்தா பயப்படுவன்னு எனக்கு தெரியும்.. காவ்யாகிட்ட உண்மையை சொல்லு அவளை தேவையில்லாம குழப்ப வேண்டாம்னுதான் பொய் சொல்லிட்டு வந்தேன்.. அவளை நான் ரொம்ப நேசிக்கிறேன்..தயவு செஞ்சி எங்க வாழ்க்கைல எந்த பிரச்சனையும் பண்ணனும்னு நினைக்காத.. அப்பறம் நான் உன்மேல காட்டற அக்கறையை தப்பா புரிஞ்சிகிட்டு நான் மனசுமாரி உன்கிட்ட ஏதாவது தப்பான உறவு வச்சிப்பேன்னு தப்பி தவறி கூட நினைக்காத.. soory to say this ..இனிமே இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமான்னு தெரியல.. அதனால எல்லாத்தையும் சொல்லிடுறேன்..”

என்றதும் சுள்ளென்ற கோபம் முகத்தில் படர "அரவிந்த் ஸ்டாப்.. நா அந்த மாதிரி பொண்ணு கிடையாது " என்று கத்தியே விட்டாள்.

 

மெதுவாக கைகளை தட்டியவன் "எனக்கு தெரியும் மோனா.. நீ அந்த மாதிரி பொண்ணு இல்ல.. அத உனக்கு புரிய வைக்க தான் நான் இத சொல்ல வேண்டியதா போச்சி.. உனக்கே தெரியத்துல்ல.. இது தப்புன்னு..இனிமே இந்த மாதிரி பேசாது.. நான் எப்பவும் உன் சொந்தம் ஆக முடியாது.. அத மனசுல வச்சிக்கிட்டு உனக்கு அமைஞ்ச வாழ்க்கையா  நல்லபடியா வாழப்பாரு.. உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் எனக்கு கால் பண்ணு ஆனா ஒரு பிரண்டா,.. ஓகேவா.. பை.. டேக் கேர்" என்றுவிட்டு கதவை சாத்திவிட்டு விருட்டென்று வெளியே வந்தான்.

கண்கள் ஆனந்தகண்ணீரால் நனைய போனை துண்டிக்க போனவள் "காவ்யா" என்று மோனாவின் குரல் கேட்டு "ஹ்ம்ம் லைன்ல இருக்கேன் " என்றாள்.

"காவ்யா.. ஒரு ஆம்பள ராத்திரி நேரம் தனியா ஒரு ரூம்ல அதுவும் அவனை மனசார நேசிச்ச ஒரு பொண்ணுகூட இவ்ளோ டீசெண்டா பேசமுடியும்னா எனக்கு ஆண்வர்க்கத்து மேலயே ஒரு மதிப்பு வருது.. உன் வாழ்க்கையை தட்டி பறிக்கிறது என் நோக்கம் இல்லாட்டியும் அரவிந்த் என்கிட்ட என் மனசுக்கு ஏத்தமாதிரி எதாவது பேசுவான் அத உன்னை கேக்க வைக்கனும்ம்னு நெனச்சேன்.. அதுல ஒரு சந்தோசம் எனக்கு.. ஆனா அவன் பேச்சுலேர்ந்து தெரியுது நீ சொன்னதுதான் கரெக்ட்ன்னு.. நீ சொன்ன மாதிரி அவன் மனசுல நீதான் மகாராணி.. அத நான் இல்ல யார் வந்தாலும் மாத்தமுடியாது..anyways good luck.. “என்று சொல்லி போனை துண்டித்தாள். மனம் மகிழ்ச்சியில் நிறைந்தாலும் ஏன் இதை அத்தான் என்னிடம் சொல்லவில்லை.. என்னிடம் பொய் சொல்லிவிட்டு போவதற்கு என்னத தேவை? உண்மையை சொன்னால் சராசரி பெண்கள் போல நானும் சந்தேகப்படுவேன் என்று எப்படிஎன்னைப்பற்றி  நினைக்கலாம் .. இதுதான் அத்தான் என்னைப்பற்றி புரிந்து கொண்டதா? என்று சற்று குழம்பித்தான் போயிருந்தாள்.

 

உன்னிடம் மயங்குகிறேன் - 13

 

மும்முரமாக சப்பாத்தியை தேய்த்துக் கொண்டிருந்த காவ்யா கைஜாடையில் யாரென்று கேட்டாள். ஒரு நிமிடம் என்று கைஜாடையிலேயே காட்டிவிட்டு பெட் ரூமிலுள்ள பால்கனிக்கு சென்று க்ளாஸ் ஸ்லைடிங் டோரை சாத்திவிட்டு, "சொல்லு.. மோனா .. என்ன ஆச்சு? ஏன் இந்த நேரத்துல கால் பண்ற" என்றான் சற்றே எரிச்சலுடன்.

"அரவிந்த், சாரி.. உனக்கு தெரியுமான்னு தெரியல .. என் அபார்ட்மெண்ட் உன் வீட்லேர்ந்து 5 மினிட்ஸ்ல தான் இருக்கு..  கீழ் வீட்ல ஒரு அமெரிக்கன் கப்பில் இருக்காங்க..  ஒரு ஒன் அவர் முன்னாடி அவங்களுக்குள்ள எதோ சண்டை போல.. அந்த லேடி .. அந்த லேடி அவங்க husbandஐ சூட் பண்ணிட்டு தன்னையும்  சூட் பண்ணிகிட்டாங்க.. ஒரே போலீஸா இருக்காங்க.. ஆம்புலன்ஸ் அது இதுன்னு பயங்கர க்ரவுடா இருக்கு.. என் ரூம் மேட் வேற இந்தியா போயிருக்கா..எனக்கு ரொம்ப பயமா இருக்கு அரவிந்த்.. சோபாக்கு கால் பண்ணேன்.. இன்னைக்கு ஒருநாள் மேனேஜ் பண்ணு.. நாளைக்கு வந்து கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க.. அவங்க வீடு இங்கேயிருந்து ரொம்ப தூரம்.. ரொம்ப லேட்டும் ஆகிடுச்சு.. விவேக்குக்கு போன் பண்ணா, அவர் வைப் தான் போன் எடுத்தாங்க.. விவேக் தூங்கிட்டு இருக்காருன்னு சொல்லிட்டாங்க.. திலீப் அப்பறம் திவ்யா எல்லாருக்கும் போன் பண்ணி பாத்துட்டேன்.. யாரும் எடுக்கல.. எனக்கு ரொம்ப லோன்லியா பயமா இருக்கு அரவிந்த்.. ப்ளீஸ் என்னை ஏதாவது ஹோட்டல்க்கு கூட்டிட்டு போறியா.. இன்னைக்கு நைட் நான் அங்க ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு என்னோட ரிலேட்டிவ் பென்சில்வேனியால இருக்காங்க.. அங்க போய்க்கிறேன்" என்றவள் குரலில் உள்ள நடுக்கம் அவள் மிகவும் பயந்து போயிருக்கிறாள் என்று காட்டியது.

"சரி.. உபர் புக் பண்றேன்.. ரகு வீட்டுக்கு போய்டு..நான் வேணும்னா ரகு இல்ல சோபாக்கு கால் பண்ணி சொல்லிடறேன்" என்றதும்

"இல்ல அரவிந்த், சோபா அப்படி சொன்னது எனக்கு கஷ்டமா இருக்கு.. அவங்க வீட்டுக்கு போக இஷ்டம் இல்ல.. ப்ளீஸ் நீ வாயேன் " விசும்பலுடன் சொன்னதும்  மனம் சற்றே இறங்க "சரி நான் வரேன்.. பயப்படாம இரு.. " என்று அரைமனதுடன் சொன்னான்.

போனில் யாராக இருக்கும்? எதாவது ஆபிஸ் விஷயமாக இருக்கும்.. இல்லையெனில் தனியாக போய் ஒருநாளும் அத்தான் பேசியதில்லையே .. என்று நினைத்தவள் சப்பாத்தியை சுட தொடங்கியிருந்தாள்.

போனை வைத்தவன் காவ்யாவிடம் விஷயத்தை சொல்லிவிட்டு, மோனாவை அழைத்துக்கொண்டு ஒரு நல்ல ஹோட்டலில் ரூம் புக் செய்து கொடுத்துவிட்டு வந்துவிடுவோம் என்று எண்ணியவன் ஒரு நிமிடம் யோசித்தான். என்னதான் காவ்யா தன் மீது மலையளவு நம்பிக்கை வைத்திருந்தாலும் தன் கணவன் இன்னொரு பெண்ணுக்கு அதுவும் அவனை காதலித்த பெண்ணுக்கு உதவ போகிறான் அதுவும் இந்த இரவு நேரத்தில் என்றால் எந்த பெண்ணுக்குத்தான் நெருடலாக இருக்காது. ஜோசியர் அப்பாவிடம் சொன்ன விஷயமும் அவன் மனதில் வந்து போனது.  அதே சமயம் மோனாவை எக்கேடோ கெட்டு போகட்டும் என்று விடவும் அவனுக்கு மனமில்லை..

கொஞ்சம் யோசித்தவன் மனதிற்குள்ளே காவ்யாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கிச்சனுக்கு வந்தான்.

"காவ்யா.. திலீப் அம்மா ஊர்லேருந்து வந்திருக்காங்க இல்ல.. அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையாம்.. எமர்ஜெண்சிக்கு கூட்டிட்டு போகணுமாம்... அவன் ரொம்ப பயப்படறான்.. என்னை கூப்பிட்டான்.. நான் போயிட்டு ஒரு ஒன் அவர்ல வந்திடுறேன்.. நீ கதவை லாக் பண்ணிட்டு பத்திரமா தூங்கு.. சரியா ?" என்றான்.

"அச்சோ .. சரி அத்தான்.. எனக்கு ஒண்ணும் பயம் இல்ல.. நீங்க போயிட்டு வாங்க.. ரெண்டு சப்பாத்தி மட்டும் சாப்பிட்டுட்டு போங்க.. இருங்க நானே ஊட்டிவிடறேன்" என்றவள் சப்பாத்தியை பிட்டு ஊட்டிவிட தொடங்கினாள்.

இந்த மோனாவால் என் உயிருக்கும் மேலானவளிடம் பொய் சொல்ல வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொண்டவன் குற்ற உணர்ச்சியோடு சாப்பிட்டு முடித்தான்.

பத்தே நிமிடங்களில் மோனாவின் அபார்ட்மென்ட் கட்டிடத்தை அடைந்தவன், போலீசின் ஆயிரத்தெட்டு கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு அவளது அபார்ட்மென்டின் காலிங் பெல்லை அழுத்தினான். கதவை திறந்தவளின் முகம் அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்திருக்க, அவன் உள்ளே சென்றதும் கதவை சாத்திவிட்டு சட்டென்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு "தேங்க்ஸ் அரவிந்த்.. யாரும் எனக்கு ஹெல்ப் பண்ண வரல.. பட் நீ வருவேன்னு எனக்கு தெரியும் ..ஐ நோ யு ஸ்டில் லவ் மீ " என்றதும்  சட்டென்று அவளை உதறியவன் "ஹே ஸ்டுபிட்.. நீ கஷ்டத்துல இருக்கன்னு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன்.. நீ எதாவது லூஸ் மாதிரி உளறிட்டு இருக்காத.. டக்குன்னு கிளம்பு.. உன்னை ஹோட்டல்ல விட்டுட்டு நான் வீட்டுக்கு போகணும்.. காவ்யா தனியா இருக்கா" என்று வார்த்தையில் வெறுப்பை காட்டினான்.

அமைதியாக ஒன்றும் பேசாமல் ரெடியாக வைத்திருந்த ட்ராவல் பேகை எடுக்க போக, "குடு இங்க" என்று அவளிடம் வாங்கிக்கொண்டான். அவன் இயல்பாய் செய்வதை அந்த இக்கட்டான நேரத்திலும் வெகுவாக ரசித்தவள், ஹாண்ட்பேகை மாட்டியப்படி, வீட்டை பூட்டிக்கொண்டு படிகளில் அவனோடு இறங்கினாள். இவர்கள் கீழிறங்கி  வரவும் பிரேதங்களை ஆம்புலன்ஸில் ஏற்றவும் சரியாக இருந்தது. அதைப்பார்த்ததும் மோனா கைகள் நடுங்க அருகிலிருந்த அரவிந்தனின் கைகளை இறுக்கமாக பிடித்துகொண்டாள். அவளின் பயத்தை பற்றி நன்கு அறிந்தவனாதலால், "ஒண்ணும் இல்ல பயப்படாத.. சீக்கிரம் வா.. கார்ல ஏறு " என்று ஆதரவாக அணைத்து காருக்கு நடத்தி சென்றான்.

காரில் ஏறி சீட்டில் அமர்ந்தவளுக்கு காரிலிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்து குடிக்க தண்ணீர் கொடுத்தான். "தண்ணி குடி.. அண்ட் ஜஸ்ட் ரிலாக்ஸ்..எதையும்  நெனச்சி மனச குழப்பிக்காத.. நல்ல ஹோட்டலா பாக்குறேன்.. " என்றபடியே ஐபோனில் தேடியவன் ஒரு குறிப்பிட்ட ஹோட்டலின் அடட்ரெஸ்ஸை கூஜ் மேப்பில் போட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.

தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவள் "அரவிந்த்.. வெட்கத்தை விட்டு சொல்றேன்.. I missed you.. நீ ரொம்ப நல்லவன்.. நீ ஏன் என்னை consider பண்ணல அரவிந்த்.. காவ்யாவோட காதலைவிட என் காதல் எதுல கொறஞ்சி போயிடுச்சி?.. you know something?  எனக்கு கல்யாணம் தான் ஆச்சே தவிர நாங்க இன்னும் husband and wifeஆ  வாழவே ஆரம்பிக்கல.. என்னால முடியல .. ஆனா அவன்.. அதான் என் புருஷன்.. என்னை ரொம்ப டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டான்.. அதான் இந்த onsite offerஐ  கேட்டு வாங்கிட்டு வந்துட்டேன்.” என்றவளை சற்றே கண்ணில் இரக்கத்துடன் பார்த்தான் அரவிந்த். ஒருவகையில் இதற்கு நாமும் காரணமாகிவிட்டோமே என்று நினைத்தவன் மனதின் ஓரத்தில் அவளுக்காக அனுதாபம் பிறந்தது.

உன்னிடம் மயங்குகிறேன் - 12

 


அரவிந்தன் சில வினாடிகள் தாமதித்து பின்னர் உணர்ந்து, அவளை மெதுவாக கீழே இறக்கிவிட, இருவரின் முகத்திலும் வெட்கத்தை தாண்டி அசடும் வழிந்தது. மற்ற பெண்களுக்கும் வெட்கமாகிவிட, கயல்விழி " இதுதான் தம்பி.. உங்க வீட்டுப்பக்கம் வராம இருந்தேன்.. அவர்கூட சொல்வாரு.. புதுசா வந்திருக்காங்க போய் ஏதாவது ஹெல்ப் பண்ணுன்னு.. ஆனா நீங்க ரெண்டு பேரும் ரொமான்டிக் கப்பில்ன்னு எனக்கு தெரியும்.. அதான் நீங்க இல்லாதப்போ வந்தோம் , இப்பவும் வந்து ரொமான்ஸ் பண்ணா நாங்க எப்போதாம்பா மீட் பண்றது.. " என்று சிரித்துக்கொண்டே நீட்டி முழக்கினாள்.

அழகிய வெட்கச்சிரிப்போடு கையெடுத்து அவளை கும்பிட்டு "அக்கா.. ப்ளீஸ் விட்ருங்க.. தெரியாம பண்ணிட்டேன்" என்று சொன்னவன் மற்றவர்களை பார்த்து  " ப்ளீஸ் .. நீங்க எல்லாம் உட்காருங்க .."  என்று தலையை கோதியவாறே சட்டென்று உள்ளறைக்கு சென்று மறைந்துகொண்டான்.

காவ்யாவும் "அது வந்து.. அவர் யாரும் இல்லைன்னு நெனச்சு.." என்று இழுக்கவும் வந்திருந்தவர்களில் ஒருத்தி "பரவால்லை காவ்யா.. இப்படி இல்லாம இருந்தாதான் நீ கவலைப்படணும்..ஒண்ணும் பிரச்னையில்ல.. நாங்க நாளைக்கு வரோம்.. " என்று சொல்லி அனைவரையும் இழுத்துக்கொண்டு கிளம்பினாள்.

அவர்கள் போனதும் கதவை சாத்திவிட்டு நேராக உள்ளறைக்கு சென்றவள் அவனை காணாமல் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கதவின் பின்னிருந்து மெதுவாக வந்து அவளை இறுக அணைத்துக்கொண்டான். காதுமடல்களில் முத்தமிட்டபடியே "என் அழகு பொண்டாட்டி..வீட்ல தனியா கஷ்டப்படுவியேன்னு சர்ப்ரைஸா சீக்கிரம் வந்தா… நீ வீட்ல ஒரு மாநாடே நடத்திட்டு இருக்க " என்று கிசுகிசுத்தான்.

 

"அத்தான்.. விடுங்க.. பால்கனி கதவு திறந்து இருக்கு.. ஏன்  நீங்க போன் பண்ணவே இல்ல .. போன் பண்ணிருந்தா.. " என்றாள் அவன் ஷர்ட் பட்டன்களில் கோலம் போட்டுக்கொண்டே. "ஹ்ம்ம் சொல்லு ..சொல்லு.. போன் பண்ணிருந்தா யாரையும் வீட்டுக்கு கூப்பிடமா எனக்காக வெயிட் பண்ணியிருப்ப இல்ல?" என்றான் கண்ணடித்தபடியே.

"ஐயோ போங்க அத்தான்.. போன் பண்ணியிருந்தா உங்களுக்கு பிடிச்ச tiffin எதாவது பண்ணி வச்சிருப்பேன்" என்றாள் சிணுங்கிக்கொண்டே.

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. நம்ம ரெண்டுபேருக்கும் உனக்கு பிடிச்ச ஸ்ட்ராங் காபி போடு .. சேர்ந்து குடிப்போம்.. நான் பிரெஷ் அப் ஆகிட்டு  வந்திடுறேன்" என்றவன் வருவதற்குள் பாலை காய்ச்சி சுடச்சுட மணக்கும் காபியை இரு கப்புகளில் எடுத்து வந்தாள் காவ்யா.

காபியை ருசித்துக்கொண்டே அன்று ஆபிஸில் நடந்தவற்றையெல்லாம் அரவிந்தன் விவரிக்க,  ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டவள் தன் அத்தானின் பொறுப்புகளை அறிந்து முகத்தில் பெருமை பொங்க "உங்களை நெனச்சி எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு அத்தான்.. உங்க வயசுக்கு இப்பவே ரகு அண்ணாவுக்கு ஈகுவலா பொறுப்பு குடுத்து இருக்காங்க.. எவ்ளோ பெரிய விஷயம் " என்று அழகிய நீண்ட புருவங்களை உயர்த்தி மனதார பாராட்டினாள்.

"ஹ்ம்ம்.. ஆனா எனக்கு ஆக்சுவலி எது பெருமை தெரியுமா? என் கோல்ட் மெடலிஸ்ட பொண்டாட்டிக்கு  ஒரு ஐடென்டிட்டி அமைச்சு கொடுக்கறதுதான்" என்றான் ஒற்றைக்கையால் அவளது விரல்களை அளந்துகொண்டே.

புரியாமல் அவள் விழிக்க, "ஆமாம்.. காவ்யா உன் திறமையெல்லாம் எனக்கு சமைச்சி போடுறதுலயும் என்னை கவனிக்கறதுலயும் மட்டும் வேஸ்ட் பண்ணாம நீ உன்னை prove பண்ணனும்.. என்னை விட நல்லா படிக்கிற பொண்ணு நீ.. பொண்ணுங்கற ஒரே காரணத்துக்காக மட்டும் நீ வீட்ல இருந்து வீட்டை பாத்துக்கணும்ங்கிறது அநியாயம் இல்ல.. இன்னைக்கு என் டீம்ல ரெண்டு பொண்ணுங்க.. கிட்டத்தட்ட உன்வயசு தான் இருக்கும்.. அவங்க அவ்ளோ தன்னம்பிக்கையோடு சீனியர் மேனேஜர்ஸ் கிட்ட பேசுறப்போ எனக்கு உன் நியாபகம் வந்து ரொம்ப கில்டியா பீல் பண்ணேன்....” என்றவனை நன்றி பெருக்கோடு கட்டிக்கொண்டவள்,

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல அத்தான்.. நீங்க என்னை ஜாப் போகவேண்டாம்னு சொல்லலேயே.. சொல்லப்போனா எனக்கும் ஆசைதான். அப்பாவும் அம்மாவும் என்னை அவங்க கண்ணுக்கெட்டுன தூரத்துலயே வச்சிக்கிட்டாங்க..அவங்களையும் தப்புனு சொல்ல முடியாது.. அவங்க சிச்சுவேஷன் அந்த மாதிரி.. ஆனா எனக்கு பெரிய காலேஜ்ல படிக்கணும்,  MS பண்ணனும்,  சேலஞ்சிங் ஜாப்ல இருக்கணும்…அப்படின்னு நெறய ஆசை இருந்தது.." என்று அடுக்கிக்கொண்டே போனாள்.

"கவலையேபடாதடா.. ரகு அண்ணாகிட்ட சொல்லி ஒர்க் பர்மிட் விசாக்கு அப்ளை பண்ண முடியுமான்னு செக் பண்றேன்.. உனக்கு பிடிச்சதெல்லாம் செய்யறதுக்கு நம்ம கல்யாணம் தடையா எப்பவும் இருக்க கூடாது.. நெறய பெண்கள் கல்யாணத்துக்கப்பறம்  அட்ஜஸ்ட்மென்ட்ங்கிற  பேர்ல பிடிச்சதை செய்யாம விட்டுறாங்க.. என்னை கேட்டா அதுக்கு அவசியமே இல்ல.. ஆண்களுக்கு பிடிச்சதை செய்ற உரிமை இருக்குறமாதிரி பெண்களுக்கும் இருக்கணும்.. அட்லீஸ்ட் என் பொண்டாட்டிக்கு இருக்கணும்." என்று அவளது தலையை வருடிக்கொடுத்தான்.

“என்னோட ஐடென்டிட்டிகாக நானே யோசிக்காத விஷயத்தை எனக்காக நீங்க யோசிக்கிறீங்க அத்தான். நீங்க கிடைச்சதுதான் என் வாழ்க்கையோட பெரிய அதிருஷ்டம்.. இதுக்கு மேல என்னை கிடைச்சாலும் எனக்கு இவ்ளோ சந்தோஷமா இருக்குமான்னு தெரியல" என்று மீண்டும் அவனை கட்டி கொண்டாள்.

திகட்டாத இனிய இல்லறம், அரவிந்தனின்  பிஸியான வேலை, காவ்யாவிற்கு அருகிலுள்ள பெண்களுடனான நட்பு, சொந்தங்களோடு போன் கால்கள், ஏரியோர வாக் , வெள்ளிக்கிழமைகளில் கோவில், வார இறுதியில்  நண்பர்களுடன் கெட்டுகெதர், ஊர் சுற்றி பார்த்தல் என்று காதலோடு அவர்கள் திருமண வாழ்வின் நாட்கள் இனிதே கழிந்தன.

முழுதாய் மூன்று மாதங்கள் ஓடிவிட்டிருக்க, ஓர் சனிக்கிழமை இரவு டிவியில் படம் பார்த்து முடித்தவர்கள் மணி 10 ஆகியிருக்க, இரவு உணவுக்கு சுடச்சுட சப்பாத்தியும் தொட்டுக்கொள்ள சுவையான காய்கறி குருமாவும் செய்தவளுக்கு கூடவே இருந்து உதவியவன், போன் அடிக்கவும் கைகளை துடைத்துக்கொண்டு ஹாலில் சார்ஜில் இருந்த போனை எடுத்து பார்த்தான். சேவ் செய்யப்படாத எண்ணாக இருக்கவும் யார் இந்த நேரத்தில் என்று எடுத்து "ஹலோ, அரவிந்த் ஹியர்.. மே ஐ நோ ஹு இஸ் திஸ் ?" என்றான்.

எதிர் முனையில் தயங்கியவாறே "அரவிந்த்.. நான் மோனா.. " என்றதும் முகம் குப்பென்று வியர்க்க, சட்டென்று கிச்சனை எட்டி பார்த்தான்.

.

Thursday, March 25, 2021

உன்னிடம் மயங்குகிறேன் - 11

 

 

    தோளுக்குமேல் வளர்ந்தாலும் எந்தவொரு விஷயத்திலும் தன்  சொல்லைத்தட்டாத, தன்மேல் தனி பாசமும் மரியாதையும் வைத்திருக்கும் மகனின் கேள்விக்கு பதில் சொல்லும்முன், அவனை நெஞ்சார அணைத்துக்கொண்டார் சுகுமாரன்.

வசந்தாவிற்கு அவன் என்றும் குழந்தை தான். அவன் தலையில் எண்ணெய் வைத்துவிடுவது , சரியாக துவட்டாத ஈரத்தலையை துவட்டி விடுவது , மகன் டிவி பார்த்துக்கொண்டிருந்தால் அவனை தொந்தரவு செய்யாது சாப்பாடு ஊட்டிவிடுவது, அவ்வப்போது செல்லமே தங்கமே என்று கொஞ்சுவதுமென வசந்தா இன்னமும் அவனை குழந்தையாகத்தான் பார்ப்பாள். ஆனால் சுகுமாரன் அவனை ஒரு சக நண்பனை நடத்துவது போலத்தான் நடத்துவார். "தம்பி"  என்று வாஞ்சையுடன் அழைப்பவர் அவனோடு அரசியல், பொருளாதாரம், பன்னாட்டு வணிகம் என அனைத்தையும் விவாதிப்பார்.

அரவிந்தனும் அம்மாவிடம் அவளுக்கு ஏற்றாற்போல் குழந்தையாகவும் சுகுமாரனிடம் பெரிய மனித தோரணையுடன் பேசுவதும் என பழகிவிட்டிருந்தான். அன்று தன் தந்தை சற்றே மனம் தடுமாறி தன்னை அணைத்துக்கொண்டதும் அவனுக்கு தெளிவாக புரிந்தது எதோ ஒன்று அவர் மனதை அழுத்திக்கொண்டிருக்கிறது என்று.

அவனும் ஆதரவாக அவரை அணைத்துக்கொண்டு "அப்பா, எதுவா இருந்தாலும் நான் இருக்கேன் உங்களுக்கு. தைரியமா சொல்லுங்க" என்றான்.

மெதுவாய் அவனை விடுவித்துவிட்டு "தம்பி.. போன வாரம் வரை உங்க கல்யாணம் என்ன ஆகுமுன்னு நானும் அம்மாவும் ரொம்ப யோசனையா இருந்தோம்.. உன் அம்மா வேண்டாத கடவுள் இல்ல.. எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சி நாமளும் செத்து பொழச்சி வந்துட்டோம். எல்லாரோட சம்மதத்தோட உங்களுக்கு நிச்சயம் பண்ணற வரைக்கும் வந்திட்டோம்.. இன்னைக்கு காலையில ஜோசியர் வந்து உங்க ரெண்டு பேரோட ஜாதககத்தை பார்த்து பொருத்தம் இருக்குன்னு சொல்றவரைக்கும் நானும் அம்மாவும் டென்ஷனாதான் இருந்தோம். அவர் நல்ல வார்த்தை சொன்னதும் எங்களுக்கு நிம்மதியா இருந்திச்சி.. ஆனா அந்த நிம்மதி எனக்கு ஒரு மணிநேரம் கூட நிலைக்கலப்பா.. ஜோசியர்  கெளம்பி கொஞ்ச நேரத்துக்கெல்லாம்  உங்க மணிமாமாக்கு ஒரு போன் வந்திச்சி.. அது ஜோசியர் கிட்டருந்துன்னு தெரிஞ்சதும் அவன் மனசுக்கு சரியாபடலை போல .. தனியா போய் அவர் போன் எடுத்து கேட்டதுக்கு ‘ஒரு முக்கியமான விஷயம்.. நீங்க மட்டும் உடனே என் வீட்டுக்கு வாங்க’ன்னு சொல்லியிருக்காரு.. மணிமாறன் என்கிட்ட மட்டும் விஷயத்தை சொல்லி நானும் அவனும் சேர்ந்தே ஜோசியர் வீட்டுக்கு போனோம்..

ஜோசியர் ரொம்ப தயங்கிக்கிட்டே "மணிமாறன் தம்பி... நான் உங்க குடும்பத்து மேல ரொம்ப மரியாதை வச்சுருக்கேன்.. உங்க அப்பாவும் அம்மாவும் என்னை கலந்துக்காம எந்த ஒரு நல்ல காரியமும் பண்ண மாட்டாங்க.. என்மேல அவங்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை.  இதெல்லாம் உங்களுக்கே தெரியும்.. ஆனா இத்தனை வருஷம் இல்லாம இன்னைக்கு அந்த நம்பிக்கைய பொய்யாக்கிட்டேன்.. ஏன்னா நான் என்ன சொல்வேனோன்னு உங்க எல்லாரோட முகத்துல இருந்த பதட்டம், அதைவிட அந்த சின்னசிறுசுங்க முகத்துல தெரிஞ்ச பயம் இதெல்லாம் பாத்துட்டு பொருத்தம் நல்லா இருக்கு கல்யாணம் பண்ணலாம்னு சொல்லிட்டேன்.. ஆனா பொருத்தங்கள்ல முக்கியமானது தம்பதியருக்குள்ள இருக்குற ரஜ்ஜு பொருத்தம்.. அது இவங்க ஜாதகத்துல இல்ல.. ரஜ்ஜு பொருத்தம் இல்லன்னா ஒருத்தரயொருத்தர் சரியாய் புரிஞ்சிக்காம நிறைய பிரச்சனைகள் வரலாம்.. முக்கியமா மற்ற பெண்களால் இவங்களுக்குள்ள பிரிவு வரலாம்.. அதனாலதான் பொதுவா இந்த மாதிரி ஜாதகங்களை சேக்க மாட்டாங்க..மத்தபடி தனித்தனியா பாத்தா ரெண்டு பேரு ஜாதகமும் நல்ல ஜாதகம்தான். எனக்கு எல்லாரையும் வச்சிக்கிட்டு சொல்ல முடியல.. நீங்க பக்குவமா வீட்ல பேசி இவங்க ரெண்டு பேருக்கும் வேற இடம் பாக்கறது நல்லது "ன்னு முடிச்சார்.

எனக்கும் மணிமாறனுக்கும் நெஞ்சே வெடிக்கறமாதிரி இருந்திச்சி.. அவருகிட்ட எதாவது பரிகாரம் பண்ணா சரியாகுமான்னு கேட்டோம்..அவரு அதுக்கு பரிகாரம் எல்லாம் நம்மள சமாதானம் படுத்திக்கத்தான் பண்றது.. மத்தபடி நடக்கறது விதிப்படிதான் நடக்கும்னு கைய விரிச்சிட்டாரு..

மனசு ரொம்ப பாரமாகி வீட்டுக்கு வந்து பாத்தா வீட்ல எல்லாரும், குறிப்பா காவ்யா ரொம்ப சந்தோசமா சிரிச்ச முகத்தோட எங்களை மதியசாப்பாடு சாப்பிட கூட்டிட்டு போனா.. அவளோட அப்பாவுக்கும் வருங்கால மாமனாரான எனக்கும் அவ கையாலேயே பாசமா பறிமாறுனா.. அந்த முகத்துல சிரிப்பு காணாம போறது என்னால நினைச்சி கூட பாக்க முடியல.. சாப்பிட்டு முடிச்சதும் மணிமாறனை தனியா கூட்டிட்டு போய் இந்த விஷயத்தை பத்தி வீட்டுல யார்கிட்டயும் சொல்ல வேணாம்.. நாம முடிவு பண்ணது பண்ணதாவே  இருக்கட்டும்.. கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு கல்யாணத்த நடத்துவோம்ன்னு சொன்னேன். அவனும் சரின்னுட்டான். ஆனா எனக்கு மனச உறுத்திக்கிட்டே இருக்குப்பா.. உங்க அம்மாகிட்டேயும் சொல்ல முடியல.. அதான் நல்லதோ கெட்டதோ உன்கிட்ட சொல்லிடலாம்னு நெனச்சேன்.. நீ இத எப்பவும் மனசுல வச்சிக்கிட்டு காவ்யாகிட்ட அணுசரணையா நடந்துக்கோ.. உன் வாழ்க்கையில எதாவது பிரச்னைன்னா எங்களால தாங்க முடியாதுப்பா " என்று நீண்ட பெருமூச்சுடன் முடித்தார்.

அரவிந்தனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் சமாளித்துவிட்டு " அப்பா, இவ்ளோதானா.. நான் என்னவோன்னு பயந்து போய்ட்டேன்.. அஸ்ட்ராலஜி ஒரு சயின்ஸ் தான்.. ஆனா அத மட்டும் வச்சி வாழ்க்கைய முடிவு பண்ணமுடியாதுப்பா..உங்களுக்கே நல்லா தெரியும்.. காவ்யா என்னை எவ்ளோ புரிஞ்சி வச்சிருக்கான்னு.. என்மேல எனக்கு இருக்கற நம்பிக்கையைவிட அவளுக்குத்தான் அதிகமா இருக்கும். எனக்கும் அப்படித்தான் அப்பா. எங்களுக்குள்ள ஜோசியர் சொன்னமாதிரி எந்த மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கும் எப்பவும் வராது.. நீங்க எடுத்த முடிவுதான் சரி.. மனச போட்டு வருத்திக்காம நிம்மதியாக இருங்கப்பா.." என்று தந்தையை சமாதானப்படுத்தினான்.

அதன்பிறகு நிச்சயதார்த்த வேலை, வடிவும் பவித்ராவும் பண்ணிய கலாட்டாவென்று சுத்தமாக இந்த விஷயத்தை மறந்தேவிட்டிருந்தான்.

நிச்சயதார்த்தத்திற்கு முதல்நாள் இரவு  மீண்டும் மகனை இன்னொருமுறை கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளலாம் என்று அவனைத்தேடி மொட்டை மாடிக்கு வந்தவர் மகனும் மருமகளும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்ததும் திரும்ப எத்தனித்தார். சட்டென்று காவ்யாவின் விசும்பல் கேட்கவே, மாடிப்படிகளிலேயே நின்று என்ன காரணம் என்று தெரிந்ததுக்கொள்ள நினைத்தார்.

"என்னாச்சு காவ்யா.. அத்தை மறுபடி எதுவும் சொன்னாங்களா " என்று அரவிந்தன் காவ்யாவின் அருகில் வந்து பரிவுடன்  கேட்டான். “இல்ல அத்தான்.. இங்க பாருங்க " என்றுசொல்லிவிட்டு கையிலிருந்த அந்த பழைய புகைப்படத்தை காட்டினாள். கள்ளம் கபடம் அற்ற வெள்ளந்தி பெண்ணாய் வெட்கசிரிப்போடு வள்ளி அந்த புகைப்படத்தில் இருக்க "இது.. இதுதான் என் அம்மா .. வள்ளி அம்மாவாம் அத்தான்.. இப்போதான் அம்மா கூப்பிட்டு என்கிட்ட குடுத்தாங்க.. எனக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சதால வள்ளி அம்மாவையும் நான் பாக்கணும்னு அம்மா நெனச்சாங்களாம்.. அவங்க முன்னாடி என்னால என்னோட பீலிங்ஸ்ச காட்டிக்க முடியல.. பாவம் அம்மா.. அதனால சரிம்மான்னு  சொல்லி சும்மா வாங்கிட்டு வந்துட்டேன்.. ஆனா என்னால அழுகையை அடக்க முடியல அத்தான்.. வள்ளி அம்மா பாவம்ல .. எவ்ளோ இன்னொசெண்டா இருக்காங்க பாருங்க " என்று மீண்டும்  அழத்தொடங்கினாள்.

அவளது மனவேதனையை புரிந்தவனாய் அவளை நெஞ்சில்  சாய்த்துக்கொண்டு  "அழாதடா.. எங்க இருந்தாலும் உன் அம்மா உன்ன பார்த்துகிட்டு உன்ன bless பண்ணிட்டுதான் இருப்பாங்க.. நீ சந்தோசமா இருக்கறதுதானே அவங்களுக்கு பிடிக்கும்.. கண்ணை தொட.. நம்ம கல்யாணம் ஆன உடனே உங்க அம்மாவே நமக்கு வந்து பொண்ணா பிறப்பாங்க பாரு " என்றதும் அவனை இறுக அணைத்துக்கொண்டவள்  "இதுக்குதான் உங்கள பாக்கணும்னு நெனச்சேன் அத்தான்.. என்னோட எவ்வளவு பெரிய துக்கத்துக்கும் உங்க வார்த்தையிலே மருந்து இருக்கும் " என்றதும் "ஹ்ம்ம்.. வார்த்தையிலே மட்டுமா? " என்று அவளை வெட்கப்படவைத்தவன் “இந்த நம்பிக்கையை காலம் பூரா காப்பாத்துனாலே போதும் .. I will be a successful husband" என்று சிரித்தபடியே அவளை அணைத்துக்கொண்டான்.

தனக்கு வேதனை தரும் எந்த விஷயத்தையும் உடனே அரவிந்தனிடம் பகிர்ந்து கொண்டால் தனக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று தன் மகன்மேல்  முழு நம்பிக்கை வைத்திருக்கும் மருமகளுக்கும் அவளது மனமறிந்து நடந்துகொள்ளும் மகனுக்கும் இடையே புரிதலில் பிரச்சனை வருவது சாத்தியமே இல்லை என்று நம்பிக்கை வந்ததும் முகத்தில் புன்னகை பூக்க கீழிறங்க போனவர் "மாமா .. எப்போ வந்தீங்க.. சாரி மாமா.. அத்தானை பாக்க வந்தீங்களா .. மேலதான் இருக்காரு கூப்பிடவா"என்று காவ்யாவின் குரல் கேட்டு நின்றார்.

"இல்லம்மா.. தூக்கம் வரல.. காலாற மாடில நடக்கலாம்னு வந்தேன்.. நீ போய் தூங்கும்மா" என்று அனுப்பிவிட்டு மகனிடம் வந்தார். மகனை பார்த்து புன்னகைத்துவிட்டு "ரொம்ப சந்தோசமா இருக்குப்பா.. காவ்யா உன்னை ரொம்ப நேசிக்குறா.. காதலும் கல்யாண வாழ்க்கையும் வெறும் சந்தோசமா கொண்டாட மட்டும் இல்ல.. ரெண்டு பேர்ல யாருக்கு எந்த கஷ்டம் வந்தாலும் நமக்குன்னு ஒருத்தர் இருக்காங்க. நம்மள எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டாங்கங்கிற நம்பிக்கைதான் அடித்தளம். அந்த நம்பிக்கை என் மருமகளுக்கு உன்மேல இருக்குப்பா.. இதுக்கு மேல என்ன வேணும். ரெண்டு பெரும் சந்தோசமா இருப்பீங்க..ஆனா ஒண்ணு மட்டும் மறந்துராதப்பா.. காவ்யா எந்த அளவுக்கு உன்மேல பாசமா இருக்காளோ அதே அளவு பொசசிவாவும் இருப்பா.. அத மனசுல வச்சிக்கிட்டு பாத்து நடந்துக்கோ " என்று சொன்னது அவன் காதில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருந்தது. அப்பா சொன்னது சரிதான்.. காவ்யாவிற்கு பொஸசிவ்நெஸ் அதிகம்தான்.. பவித்ரா தன் தோளை பிடித்துக்கொண்டு அவளது செருப்பின் பக்கிள்ஸ் போட்டதற்கே தாங்க முடியாமல் அழுதவள் ஆயிற்றே.. என்று காவ்யாவை நினைத்து சிரித்துக்கொண்டவன், வீடு வந்ததும் காரை பார்க் செய்துவிட்டு வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினான்.

கதவைதிறந்தவள், பளிச்சென்று குளித்து அழகிய பிங்க் சல்வாரில் தேவதையாக மின்ன, அவனை அத்தனை சீக்கிரம் எதிர்பாக்காதவள் முகத்தில் ஆச்சர்யம் அழகாய் தெரிய "அத்தான் நீங்களா.. " என்று சொல்லி வாய்மூடுமுன், அவள் சொல்ல சொல்ல கேட்காமல் அவளை அலேக்காய் தூக்கி சுற்றியபடியே உள்ளே வர அங்கே சோபாவில் கயல்விழி மற்றும் அவளது குழந்தைகள், இன்னும் நான்கைந்து பெண்கள் அவர்களது குழந்தைகள் என்று ஒரு பெரிய கூட்டமே அமைதியாய் அமர்ந்து செய்வதறியாது அவர்களை பார்த்துக்கொண்டிருந்தது. இரு கைகளில் அவளை ஏந்தியவாறு இறக்கிவிடவும் தோணாமல் வந்தவர்களை பார்த்து ஸ்தம்பித்து போய் நின்றான் அரவிந்தன். வெட்கம் தாங்காமல் கைகளால் முகத்தை மூடியபடி தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள் காவ்யா.

 

Sunday, March 21, 2021

உன்னிடம் மயங்குகிறேன் - 10

  

முதல் நாள் என்பதால் ப்ராஜெக்ட் மேனேஜர், ப்ராடக்ட் ஓனர் அவர்களோடு மீட்டிங்ஸ் மற்றும் சில டீம் மீட்டிங்ஸ் என்று முற்பகல் முழுதும் ஓடியிருக்க கிடைத்த முப்பது நிமிடங்களில் அவரசமாக செல்போனை எடுத்து பார்த்தான் அரவிந்தன். அவன் பிஸியாக இருப்பான் என்பதை தெரிந்து போன் எதுவும் செய்யாமல் வாட்சப்பில் நிறைய மெசேஜஸ் அனுப்பியிருந்தாள் காவ்யா.

"அத்தான்.. முதல் நாள் வேலை எப்படி இருக்கிறது?"

"தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்"

"லஞ்ச் சாப்பிட்டாச்சா? தயிர்சாதம் கீழ் அடுக்கில் இருக்கிறது.. மறக்காமல் சாப்பிடுங்கள்.. வெஜ் சாலட் மிச்சம் வைக்காமல் சாப்பிடுங்கள்"

என்று ஒவ்வொன்றிலும் அவளுக்கு அவன் மீதுள்ள அக்கறை பளிச்சிட, சற்றே முகத்தில் படர்ந்த புன்னகையுடன் அவளுக்கு கால் செய்தான். போன் அடித்ததும் சட்டென்று எடுத்ததிலிருந்து தெரிந்தது அவனது போனை எதிர்பார்த்து காத்திருக்கிறாள் என்பது.

"ஹாய்டா.. என்ன பண்ற? சாரிடா..காலைல வந்ததிலிலிருந்து வரிசையா மீட்டிங்ஸ்.. முடிஞ்சதும் உடனே உனக்கு கால் பண்றேன்.. "என்று மெதுவாய் கிசுகித்தவன் "நீ சாப்பிட்டியா? தனியா இருக்கறது கஷ்டமா இருக்கா? ஒண்ணும் பயம் இல்லையே" என்று கரிசனத்துடன் அடுக்கிக்கொண்டே போனான்.

"நீங்க பக்கத்துல இல்லாதது கஷ்டமாத்தான் இருக்கு.. பட் அப்படியே அம்மா அப்பாட்ட பேசுனேன்.. ப்ரவீண்க்கு மாக்ஸ் சொல்லிக்கொடுத்தேன்.. அத்தைகிட்ட பேசுனேன்.. அப்பறம் ஹேமா கால் பண்ணி பேசிகிட்டு இருந்தா.. சோ அப்படியே டைம் போய்டிச்சி அத்தான்.. ஆனா என்னோட கல்யாணமான பிரண்ட்ஸ் சொன்னது சரியாய் போச்சி " என்று இழுத்தாள்.

"என்ன சொன்னாங்க உன் பிரண்ட்ஸ்?" குறும்பாய் சிரித்துக்கொண்டவன் அவள் என்ன சொல்வாள் என்று ஓரளவு கணித்திருந்தான்.

"இந்த பசங்க எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி தான் நம்மள நினைச்சி உருகுவாங்க.. கல்யாணம் ஆச்சுன்னா அவ்ளோதான்.. வேலை அப்பறம் அவங்க பிரண்ட்ஸ்ன்னு நம்மள டீல்ல விட்ருவாங்க.. நாமதான் அவங்களுக்காக உருகணும்ன்னு சொன்னாங்க .. சரியாதான் இருக்கு" என்றாள் பொய்யான  கவலையுடன்.

"ஹே நிஜமா சொல்லு.. நான் உனக்காக எவ்ளோ உருகுறேன்னு உனக்கு தெரியாது? "மயக்கும் குரலில் அவன் கேட்டதும் வெட்கத்தில் முகம் சிவக்க "ஹ்ம்ம் தெரியும் அத்தான்.. சும்மா சொன்னேன்" என்று சிரித்துக்கொண்டாள். "சரிடா.. நீ சாப்பிடு.. நானும் சாப்பிட்டுட்டு இன்னும் 10 மினிட்ஸ்ல இன்னோர் மீட்டிங் இருக்கு.. அதுக்கு போறேன்.. வந்திட்டு கால் பண்றேன்" என்று சத்தமில்லாத முத்தம் பதித்துவிட்டு போனை வைத்தான்.

மணி நான்கை தொட்டிருக்க அன்றைய மீட்டிங்ஸ் எல்லாம் முடிந்திருந்தது. மீதி வேலையை வீட்டிற்கு போய் கூட செய்து கொள்ளலாம் என்று நினைத்தவன் காவ்யாவிற்கு கால் செய்ய நினைத்தான். சட்டென்று நினைவு வந்தவனாக தீடீரென்று போய் நின்று அவளை அசத்துவோம் என்றெண்ணியவாறே லேப்டாப்பை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அவனுக்கு பிடித்த பாடலை ஹம் செய்தவாறு காரை ஸ்டார்ட் செய்தவன் காலையில் அப்பா சொன்னது நினைவு வந்ததும் முகத்தில் மகிழ்ச்சி முற்றிலும் வடிந்து அன்று நடந்தவற்றை பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

அன்று ஜோசியர் வந்து இருவருக்கும் அனைத்து பொருத்தங்களும் சிறப்பாக இருக்கிறதென்று சொன்னதும் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, அரவிந்தனும் காவ்யாவும் மேகத்தில் பறந்து கொண்டிருந்தனர். அத்தனை பிரச்சனைகளையும் தாண்டி ஒருவழியாக அனைவரும் ஆசைப்பட்டபடி தன் வாழ்க்கை காவ்யாவோடுதான் என்று முடிவானதும் அரவிந்தின் கால்கள் தரையிலேயே இல்லை. முகமெல்லாம் சிரிப்பாக அதுவும் அன்றே நிச்சயத்திற்கு தேவையான நகை ஜவுளி அனைத்தும் வாங்கி முடிக்க, கல்யாணக்களை இருவருக்கும் அப்போதே வந்துவிட்டுருந்தது. மகனை முகம் முழுதும் சந்தோசமாக பார்ப்பது சுகுமாரனுக்கு ஆனந்தத்தை அளித்தாலும் தன் மனதை அரித்துக்கொண்டிருக்கும் விஷயத்தை பற்றி அவனிடம் சொல்வதுதான் சரியென்று வசந்தாவிடம் வடிவு வருவதைப்பற்றி அரவிந்திடம் பேசி கவனமாக இருக்கச்சொல்லிவிட்டு வருகிறேன் என்று மொட்டைமாடிக்கு வந்தார். ஷாப்பிங் முடிந்து வந்த களைப்பு தீர குளித்து விட்டு மொட்டைமாடியில் நடந்துகொண்டே நண்பனிடம் போனில் பேசிக்கொண்டிருந்தவன் தந்தையை கண்டதும் "டேய்..நாளைக்கு பேசறேன்" என்று விட்டு வைத்தான். மகனை பார்த்து புன்புறுவலுடன் மெதுவாக தன் அக்கா அவளது மகளை கூட்டிக்கொண்டு வருவதை பற்றியும் அது அவருக்கு சிறு கலக்கத்தை தருவத்தைப்பற்றியும் சொன்னபோது, அரவிந்தன் சிரித்துக்கொண்டே "அப்பா.. நீங்க எதையும் நினைச்சி கவலைபடாதீங்க.. அத்தைய நான் பாத்துக்குறேன்.. என் மேல அவங்களுக்கு தனிப்பாசம் இருக்கு.. நான் சொன்னா கேப்பாங்க.. அவங்களால காவ்யாவுக்கோ அம்மாவுக்கோ வேற யாருக்குமோ ப்ராப்லம் வராம நான் பாத்துக்குறேன்.. நீங்க கவலைப்படாதீங்க" என்று தேற்றினான்.

மகனின் வார்த்தையில் சற்றே மனம் தெளிந்தவர் இன்னமும் தயங்கியவாறே "அது மட்டுமில்லப்பா.. இன்னொரு விஷயம். இது வீட்ல வேற யாருக்கும் தெரிய வேண்டாம். தெரியவும் கூடாது. முக்கியமா அம்மாவுக்கு தெரியக்கூடாது" என்றதும் அரவிந்தனுக்கு மனம் திக்கென்று அடித்துக்கொண்டது. அவனுக்கு தெரிந்து தன் அம்மாவுக்கு தெரியாமல் அப்பா எதுவும் செய்வதில்லை. அவருக்கென்று எந்த ரகசியமும் இல்லையென்று நினைத்திருந்தவன் காவ்யா விஷயத்தில் அது பொய்த்துப்போனது தெரிந்து ஏற்கனவே அதிர்ந்திருந்தான். காவ்யாவிற்கு தன் பெற்றோர் பற்றிய உண்மை தெரியும் என்பதை மறைத்தல்லவா வைத்திருந்தார். ஆனால் அதிலும் ஒரு ஞாயம் இருந்தது. ஆனால் இப்போது என்னவாக இருக்கும் என்று அவன் இதயம் அடித்துக்கொண்டாலும் தந்தையிடம் பொறுமையாக "எதுவா இருந்தாலும்  சொல்லுங்கப்பா.." என்றான்.

 

Wednesday, March 10, 2021

உன்னிடம் மயங்குகிறேன் - 9

பார்ட்டி முடிந்ததும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு அரவிந்தனும் காவ்யாவும் கிளம்பினர். வழிநெடுக அரவிந்தன் காரின் ஸ்பீக்கரில் ஒலித்த ரம்மியமான பாடலை பலமாய் பாடிக்கொண்டும் காவ்யாவை அவ்வப்போது பார்த்து சிரித்துக்கொண்டும் கார் ஓட்டிக்கொண்டிருக்க, காவ்யா மனம் முழுதும் மோனாவை சுற்றியே வந்து கொண்டிருந்தது.  அவனைப்பார்த்து அவ்வப்போது புன்னகைத்தாலும் உள்ளுக்குள் மோனா பேசியதையே அசை போட்டுக்கொண்டிருந்தாள்.

நிஜமாகவே மோனா அரவிந்தனை விரும்பியிருக்கிறாள் என்பது அவளுக்கு புரிந்தாலும் அடிப்படையில் அவளிடத்தில் நல்ல மனம் இல்லை என்றும் தெளிவாக தெரிந்தது.

இருந்திருந்தால் இவர்களை பார்த்ததும் மனம் வலித்தாலும் மனதார காதலித்தவனை பற்றி இழிவாக பேச எப்படி முடியும்.. இதே அத்தானை நான் திருமணம் செய்ய முடியாமல் போயிருந்தாலும் அவரை பற்றி என்னால் இப்படி தாழ்வாக நினைக்க முடியுமா? உயிரே போனாலும் என்னால் முடியாது..

ஹ்ம்ம் .. ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி.. ஆனாலும் அவள் கணவனை பற்றி சொல்லும்போது அதில் என்னை வெல்ல வேண்டும் என்ற கர்வம் மட்டுமே இருந்ததேயன்றி மகிழ்ச்சி இல்லையே .. நெடுநேரம் யோசித்தவள் பின் தன்னையே  கண்டித்துக்கொண்டாள்.

இதில் நானோ அத்தானோ செய்வதற்கு ஒன்றும் இல்லை.. ஒரு வகையில் மோனா அப்படி பேசியது கூட நல்லதற்குத்தான்.. அத்தானை பேசியது கோபத்தை வரவைத்தாலும் அவளது மேலோட்டமான காதல் தன்னுடைய குற்ற உணர்ச்சியை குறைத்தது போலிருந்தது அவளுக்கு. எப்படி பார்த்தாலும் அத்தானுக்கு ஏற்றவள் நான் தான்.. என்னைப்போல் அவரை யாரும் நேசிக்க முடியாது என்று எண்ணிக்கொண்டவள்,  பக்கவாட்டில் திரும்பி அவனது சிரித்த முகத்தை ரசித்துக்கொண்டே வந்தாள்.

மறுநாள் காலை அதிகாலையிலேயே எழுந்தவள் வழக்கம் போல வேலைகளை பரபரப்போடு செய்து முடித்தாள். அன்று அரவிந்த் புது ப்ராஜெக்ட்டில் அதுவும் புது ஆபிசில் சேர வேண்டும் என்பதால் காலையிலே டிபன் செய்து, லஞ்சும் பேக் செய்திருந்தாள்.

அரவிந்த் குளித்து விட்டு வருவதற்குள் அவனது உடைகளை அழகாய் அயர்ன் செய்து கொண்டிருந்தவளை, ரசித்து பார்த்தவன் பின்புறமாய் அவளை அணைத்துக்கொண்டு,

"ஹே காவ்யா.. இதெல்லாம் நான் பண்ணிக்க மாட்டேனா? இத்தனை வருஷம் நான் தானே பண்ணிக்கிட்டேன்? கல்யாணம் ஆனதும் எல்லாமே என் மனைவி தான் செய்யனும்னு நினைக்கிற சராசரி ஆம்பள நான் இல்லன்னு உனக்கு தெரியுமில்ல ?" காது மடல்களில் கிசுகிசுத்தவனை திரும்பி காதலுடன் பார்த்தவள்,

"அத்தான், இதெல்லாம் உங்களுக்கு பண்றது எனக்கு எவ்வளவு சந்தோசத்தை கொடுக்குது தெரியுமா? எப்பவும் என் மனச புரிஞ்சிகிட்டு என்ன எங்கேயேயும் விட்டுக்கொடுக்காம எனக்காக எதுவும் செய்யற என் அத்தானுக்கு நான் இதுகூட செய்ய மாட்டேனா?"  என்றாள்.

"ஹ்ம்ம்.. சரிங்க பொண்டாட்டி.. அப்பறம் நான் சொன்னதெல்லாம் மறந்துடாதடா.. எதுன்னா எனக்கு கால் பண்ணு.. உன் போன்ல என் செல் போன் நம்பர், கயல் அக்கா நம்பர், விவேக் நம்பர், திலீப் நம்பர், ரகு நம்பர் அப்பறம் ஷோபா நம்பர் எல்லாத்தையும் சேவ் பண்ணியிருக்கேன். அப்பறம் நம்ம வீட்ல எல்லாரோட நம்பர்ஸ் கூட சேவ் பண்ணிட்டேன். அதுதவிர உன்னோட பிரெண்ட்ஸ் நம்பர்ஸ் வேணும்னா பழைய போன்ல இருந்து இதுல சேவ் பண்ணிக்கோ.. நான் ஆபீஸ் போனதும் என் டெஸ்க் நம்பர் பாத்துட்டு சொல்றேன் அதையும் சேவ் பண்ணிக்கோ.. சரியா " என்று அவளுடைய புத்தம் புது ஐ போன் 12 ஐ கையில் கொடுத்து விட்டு கிளம்ப ஆரம்பித்தான்.

இன்று முதல் அவன் ஆபீஸ் செல்வதால் அவளுக்கு தேவையான அனைத்தையும் ஒன்று விடாமல் நேற்று இரவே சொல்லி முடித்தவன் சற்றே உள்ளுக்குள் கலங்கத்தான் செய்தான். அவனும் வீட்டில் இல்லையென்றால் தனிமையில் எப்படித்தான் பொழுதை கழிப்பாளோ.. பாவம். வீடு முழுக்க ஆட்களோடு இருந்தவளுக்கு இது பெரும் தண்டனைதான். தினமும் ஆபீஸ் முடிந்து சீக்கிரம் வந்துவிட வேண்டுமென்று நினைத்துக்கொண்டான்.

பார்மல் உடையில் அதுவும் முதல் நாள் என்பதால் ப்ளேசர்(Blazer) அணிந்து ஜம்மென்று வந்த நின்ற கணவனை கண் கொட்டாமல் பார்த்தவளை கண்டு அரவிந்தனுக்கு மெல்லிய வெட்கம் எட்டிபார்க்க "அத்தான், என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. ரொம்ப அழகா இருக்கீங்க.. " என்றவள் அவனது உடை கலையாமல் மெலிதாக அணைத்துக்கொண்டாள்.

"Thank you பொண்டாட்டி.. இந்த எக்ஸ்ட்ரா அழகெல்லாம் நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் வந்ததுதான்.. நேத்து பார்ட்டில கூட என் பிரண்ட்ஸ் இதைத்தான் சொன்னாங்க.. எல்லாம் நீ எங்கூட இருக்குற சந்தோசம் தான் "என்று அவளை முத்தமிட நெருங்கியவனை தடுத்து, "அத்தான், ப்ளீஸ் ... வாங்க சாமி கும்பிடலாம்.. அப்பறம் அத்தை மாமாட்ட பேசணும்.. அப்பறம் சாப்பிட்டு கிளம்ப லேட் ஆய்டும்" என்று நாணத்துடன் அவனை விட்டு விலகினாள்.

பூஜை அறையில் சாமி விளக்கேற்றி கண்களை மூடி மனதார கடவுளை வணங்கிக்கொண்டிருந்தவளை ரசித்துக்கொண்டவன், தானும் கண்களை மூடி மனமுருக வேண்டிக்கொண்டான்.

"கடவுளே, இந்த தேவதை என் வாழ்க்கையில் வர எத்தனை ஏங்கினேன்.. இன்று இவள் என் மனைவி.. எல்லாம் கனவு போல் இருக்கிறது.. இந்த கனவு கலைந்து விடக்கூடாது.. நானும் இவளும் நூறு வருடம் சேர்ந்து வாழ வேண்டும்.. " என்று சொல்லிக்கொண்டவன் மனதில் திடீரென்று தன் தந்தை சுகுமாரன் நிச்சயத்திற்கு முதல் நாள் சொன்னது படம் போல் ஓடியது. சற்றே மனம் சஞ்சலப்பட்டாலும் ‘என்ன இது.. நான் எப்போதிருந்து இதையெல்லம் யோசிக்க ஆரம்பித்தேன்.. அப்பா சொன்னபோது அவரை சமாதானப்படுத்தி அவர் பயத்தை தெளிய வைத்த நானா இப்படி யோசிப்பது.. நோ"  என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டவன்,

"அத்தான்.. " என்று காவ்யா அழைத்ததில் நிகழ்காலத்திற்கு வந்தவன் அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு "ஓகே.. வீட்டுக்கு கால் பண்ணலாமா?" என்றுவிட்டு வசந்தா எண்ணை அழைக்க, வழக்கமான விசாரிப்புகளை தொடர்ந்து அம்மா அப்பாவிடம் ஆசியும் வாங்கி கொண்டான் அரவிந்தன். சுகுமாரன் மட்டும் தனியாக "தம்பி.. டிரைவ் பண்றப்போ பாத்துப்பா.. சொன்னதை மறந்துடாத" என்று அழுத்தி சொல்லவும் அரவிந்தனும் அப்பா சொல்வது புரிந்தவனாக "ஹ்ம்ம் சரிப்பா.. I will be careful. பயப்படாதீங்க" என்று விட்டு இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தான்.

மணிமாறன் நம்பருக்கு அழைத்து வீட்டில் தாத்தா பாட்டி மற்றும் அனைவரிடமும் சொல்லிவிட்டு போனை வைத்தவர்கள், இருவருமாய் சேர்ந்து காலை உணவை முடித்தனர்.

மணி 8:30 ஆகியிருக்க, லேப்டாப் மட்டும் லஞ்ச் பேக் சகிதமாய் கிளம்பியவன் அவளின் நெற்றில் முத்தமிட்டு, கார் பார்க்கிங் வரை கூடவே வந்தவளை "பத்திரமா இருடா.. நான் ரீச் பண்ணிட்டு போன் பண்றேன்" என்று காரை கிளப்பினான்.

அத்தான் செல்வதையே ஆசையாய் பார்த்துக்கொண்டிருந்தவள் கார்  கண்களை விட்டு மறையும் வரை இருந்துவிட்டு பின் வீட்டுக்குள் சென்று கதவை சாத்தினாள்.

காலையில் அவரச கதியில் வேலை செய்ததால், களேபரமாக இருந்த வீட்டை ஒழுங்கு படுத்திவிட்டு கையில் காபியுடன் சோபாவில் அமர்ந்தவள் அரவிந்தனின் கால் வந்ததும் எடுத்து ஆன் செய்தாள். "காவ்யா, ஆபீஸ்க்கு வந்துட்டேன்.. இப்போவே ஒரு மீட்டிங் இருக்கு.. டாம் அண்ட் அவரோட பாஸ் கூட.. சோ முடிச்சிட்டு கால் பண்றேன்.. நீ பத்திரமா இரு.. வீட்டுக்கு கால் பண்ணி பேசு ..உன்ன தனியா விட்டுட்டு வந்தது மனசுக்கு என்னமோ போல இருக்கு " என்று அவசரமாய் சொன்னவனை "அத்தான்.. ப்ளீஸ் என்னைப்பத்தி கவலை படாதீங்க.. நீங்க உங்க வேலைல கான்செண்ட்ரட் பண்ணுங்க.. நான் பாத்துக்கிறேன்.. நீங்க பிரீயா இருக்கறப்போ கால் பண்ணுங்க " என்றுவிட்டு போனை வைத்தாள்.

வேலை நேரத்திலும் தன்னை பற்றி யோசிக்கும் தன் அத்தானின் அன்பில் நெகிழ்ந்தவள் 'கடவுளே ஏன் எனக்கு எல்லாமே நல்லதாக செய்து கொண்டிருக்கிறாய்? என்னை சுற்றி நல்லவர்களையே படைத்திருக்கிறாய்.. என் ஆசை அத்தானை எனக்கே கொடுத்திருக்கிறாய்.. என்னை பெற்றவளை என்னிடமிருந்து பறித்துக்கொண்டதற்கு பரிகாரம் செய்கிறாயா?"  என்று நினைத்துக்கொண்டவள் திடீரென்று நினைவு வந்தவளாக தன் பெட்டியில் வைத்திருந்த வள்ளியின் புகைப்படத்தை எடுத்து ஆசை தீர பார்த்தாள்.

'என் அம்மா.. எத்தனை அழகு.. எத்தனை வெகுளித்தனமான பார்வை.. என்னை பார்த்ததும் என்ன நினைத்திருப்பாள்.. சந்தோசப்பட்டிருப்பாள்.. அதே நேரம் தன் குழந்தையை விட்டு பிரியப்போகிறோம் என்பதை நினைத்து கலங்கியும் இருப்பாள்' என்று நினைத்த மாத்திரத்தில் காவ்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது.  மெலிதாக "அம்மா.. அம்மா.." என்று வாய் விட்டு அழைத்தவளை புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தாள் புகைப்படத்தில் இருந்த வள்ளி.


Sunday, March 7, 2021

உன்னிடம் மயங்குகிறேன் - 8


சற்றே மாநிறத்தில் தன்னைவிட அழகிலும் உயரத்திலும் குறைந்தவளாய், கண்களில் ஏற்றிக்கொண்ட அலட்சியத்தோடு தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவளை பார்த்து நட்பாய் சிரித்த காவ்யா, "ஹாய் மோனா"  என்றவள் அரவிந்தனை பார்க்க, என்ன பேசுவது என்ற குழப்பத்தில் மோனாவை பார்த்து "ஹாய்" மட்டும் சொல்லி வைத்தான் அரவிந்தன்..


பட்டும் படாமலும் அவர்களை பார்த்து சிரித்தவள், அதற்குமேல் அவர்களை சேர்த்து பார்க்க முடியாமல் அங்கிருந்து நழுவி மற்ற பெண்கள் கூடியிருந்த இடத்திற்கு சென்றாள்.


காவ்யாவையும் அரவிந்தனையும் ரகுவின் மேனேஜர் டாமும் அவரது மனைவி மரியாவும் இருந்த இடத்திற்கு அழைத்துச்சென்ற ஷோபா, அழகிய ஆங்கிலத்தில் இருவரையும் அவர்களிடம் அறிமுகப்படுத்தினாள்.


ஐம்பதுகளில் இருந்த டாம் "Hello Guys,  congratulations !! என்றவர்,  “Welcome to united states " என்று காவ்யாவை பார்த்து கைகளை கூப்பி வணங்க, அவரது மனைவி காவ்யாவை கண்கள் விரிய பார்த்தவாறு "Aww.. you look beautiful .. you guys are made for each other " என்று கைகளை குலுக்கினாள்.


முதன் முறை வெளிநாட்டவரோடு பேசுவதால் கண்களில் சற்று மிரட்சி தெரிந்தாலும், சுதாரித்துக்கொண்டு கன்னத்தில் குழி விழ அழகாய் சிரித்தவள் இருவரையும் பார்த்து கைகள் கூப்பி "Thank you Mr. Tom and thanks for the complements Ms.Maria” என்ற காவ்யாவை பெருமையுடன் பார்த்து சிரித்துக்கொண்ட அரவிந்தன் தானும் டாமோடு கைகளை குலுக்கிவிட்டு “Thank you Tom” என்றான்.


விதவிதமான பதார்த்தங்கள் டைனிங் ஹாலில் உள்ள பெரிய டேபிளில் அழகாய் அடுக்கிவைக்கப்பட்டிருக்க, அங்கு அழைத்துச்சென்ற ஷோபா "Appetizers are here.. help yourself guys” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு "I will be right back “ என்று மற்ற விருந்தினர்களை கவனிக்க சென்றாள்.


வந்திருந்தவர்களில் பாதிபேர் இந்தியர்கள் அல்லாதவர்கள் என்பதால் மல்டி குஸைனில் பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருந்தாலும், தென்னிந்திய பதார்த்தங்களின் நிறமும் மணமும் மரியாவை கவர்ந்திழுக்க, ஒவ்வொரு ஐட்டத்தை பற்றியும்  பின்னாலேயே வந்த  அரவிந்தன் மற்றும் காவ்யாவிடம் விளக்கம் கேட்க, அழகிய ஆங்கிலத்தில் ஒவ்வொரு உணவை பற்றியும் தெளிவாக அரவிந்தன் விளக்க, காவ்யா மரியாவிற்கு தேவையானவற்றை எடுத்துகொள்ள உதவினாள்.


கைகளில் உணவை ஏந்தியவாறு கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டே அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க, காவ்யா அத்தனை ஆண்கள் மத்தியிலும் தனியாக தெரிந்த தன் அத்தானை ரசித்தவாறு பெயருக்கு எதையோ கொரித்துக்கொண்டிருந்தாள்.


உயர் அதிகாரிகளிடம் மரியாதை கலந்த தன்னம்பிக்கையுடனும், தன் வயதையொத்த நண்பர்களோடு அவர்களை கலாய்த்து நகைச்சுவையோடும் பெண்களிடம் பேசும்போது கண்ணியதோடு பேசுவதையும் கண்டு உள்ளூர மகிழ்ந்தவள் தனக்கு அவன் மீதுள்ள காதலும் மரியாதையும் பன்மடங்கு பெருகுவதை உணர்ந்தாள்.


அதே நேரத்தில், தூரத்தில் மற்ற பெண்கள் காவ்யா கட்டியிருந்த புடவையை பற்றியும், போட்டிருந்த நகையை பற்றியும் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டிருக்க, மற்ற பெண்களோடு பேசும் சாக்கில் மோனாவின் கண்கள் அரவிந்தனை ரகசியமாய் அளந்து கொண்டிருந்தன.


இந்த ஆறு மாதங்களில் இன்னும் அழகாய் தெரிந்தவன் முகத்தில் கூடிய வசீகரமுமாய் சிரித்த  முகமுமாய், அவ்வப்போது காவ்யா பேசுவதை குனிந்து அக்கறையாய் கேட்பதும் தன்னருகில் நின்றவாறே சாப்பிட்டுக்கொண்டிருந்த டாம் தம்பதியினருடன் தோள்களை குலுக்கி பேசிக்கொண்டுமிருந்தவனை காண மனம் பொறுக்காமல் காது மடல்கள் சூடாக, தனக்கு சொந்தமாகவேண்டியவன், இன்று எவளோ ஒருத்தியின் அருகில் என்று ஆத்திரத்தோடு காவ்யாவை பார்த்தாள்.


அனைவரையும் திரும்பிப்பார்க்கவைக்கும் அழகோடு, சேலைதலைப்பை ஒற்றையாய் விட்டு அதை அழகாய் திறமையாய் கேரி செய்தவளை பொறாமை கலந்த ஆச்சரியதோடு பார்த்தவள், தான் ஒருநாள் அவர்களது டீமை சேர்ந்த அனில் மனைவியின் வளைகாப்புக்கு புடவை அணிந்து அது சொதப்பி, சோளக்காட்டு பொம்மை போல வந்து நின்றபோது அவளது டீமில் அனைவரும் சிரிக்க, ஒருபடி மேலே போய் கலாட்டா பேர்வழியான திலீப் "உனக்கு இதெல்லாம் தேவையா? " என்று நக்கலடிக்க அவனை கண்டிக்கும் தொனியில் பார்த்துவிட்டு அரவிந்தன் "you should have come in your comfortable outfit” என்று அக்கறையாய் சொன்னதும் நினைவுக்கு வந்தது. யாரோ ஒரு பெண்ணான தன்னிடமே அத்தனை அக்கறை காட்டியவன் தன் மனைவி மீது எத்தனை அக்கறையாய் இருப்பான்.. அந்த நினைப்பே அவளுக்கு காவ்யாவின் மீது வெறுப்பை தந்தது..


‘உன் அக்கறையும் உன் கண்ணியமும் தானே என்னை உன்னிடம் ஈர்த்தது.. எத்தனை நம்பிக்கையோடு இருந்தேன் .. நீ எனக்குத்தான் என்று... இன்று என் வாழ்க்கை நரகத்தைவிட மோசமாக மாறிவிட்டதே.. இதற்கெல்லாம் காரணம் இவள்தான்’  என்று எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது மோனாவுக்கு.


யாரை தன் வாழ்க்கையில் பார்க்கவே கூடாதென்று  நினைத்தேனோ  அவர்களையே பார்க்கும்படியாக ஆகிவிட்டதே.. இதைவிட்டால் எனக்கு வேறு வழியும் இல்லை.. அந்த பாவியிடம் இருந்து 6 மாதங்களாவது விலகியிருக்க இந்த வாய்ப்பை விட்டால் வேறு வழியில்லை.. தன் நிலைமையை நினைத்து கழிவிரக்கத்தில் மனம் கரைய காவ்யாவின் மீதான பொறாமையில் மனம் வெதும்பி தன் விதியை நொந்து கொண்டவள் மெதுவாக கூட்டத்திலிருந்து நழுவி குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த அறைக்குள்  சென்றாள். அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தபடியே போனில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தவளின் மனம் எதிலும் பதிய மறுத்தது.


12 வயதான பர்த்டே பாய் ஆகாஷ் அவன் வயதையொத்த நண்பர்களோடு அறையிலிருந்த மானிட்டரில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்க, 3 வயதான அவன் தங்கையும் மற்ற சிறு குழந்தைகளும் காட்டுக்கத்தலோடு  அறையில் இருந்த விளையாட்டுப்பொருட்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர்.


பலமுறை சொல்லியும் கேளாமல் கத்திக்கொண்டிருந்த குழந்தைகளின் இரைச்சல் மோனாவை எரிச்சல் படுத்த போனை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியில் வர எத்தனித்தவள், அறையை நோக்கி காவ்யாவையும் அரவிந்தையும் ஷோபா அழைத்துக்கொண்டு வருவதை பார்த்ததும் உள்ளேயே நின்றாள்.


அறைக்குள் நுழைந்தவர்கள் மோனாவை பார்த்து புன்னகைக்க, ஷோபா தன் குழந்தைகளை அழைத்து  "hey guys, this is Aravinthan Uncle and Kavya aunty.. they wanted to see you”  என்றதும் அவர்களை வித்யாசமாக பார்த்த ஆகாஷ் "ஹாய்" என்றான் தயக்கத்தோடு. பொதுவாக குழந்தைகளின் பிறந்தநாள் பார்ட்டியாக இருந்தாலும் பெரியவர்கள் அவற்றை தாங்கள் கூடி பேசி மகிழும் சந்தர்பங்களாகவே மட்டும் கருதி குழந்தைகளை மறந்து பேசிக்கொண்டிருக்க, குழந்தைகள் சேர்ந்து ஒரு அறையில் விளையாடிக்கொண்டிருப்பர். கேக் வெட்டும் தருவாயில் மட்டும் வாழ்த்து தெரிவிப்பதோடு அவர்கள் கடமை முடிந்ததென்று வாங்கிவந்த உயர்தர கிப்ட்களை கூட அங்கங்கே வைத்துவிட்டு செல்வதுதான் வழக்கமாக இருக்கும் பெரும்பாலான பர்த்டே பார்ட்டிகளில்.


அதனாலேயே குழந்தைகளுக்கு வித்தியாசமாக தெரிய, அனைவரும் சட்டென்று அமைதியாகி அரவிந்தனையும் காவ்யாவையும் உற்று பார்த்துக்கொண்டிருக்க, குழந்தைகளின் உயரத்திற்கு இணையாக குனிந்து அமர்ந்த காவ்யா, அரவிந்தன் கைகளில் இருந்த அலங்காரமான பைகளில் ஒன்றை வாங்கி அதிலிருந்த LEGO NASA Apollo 11 Lunar Lander Building Kit ஐ ஆகாஷிடம் நீட்டி "Happy Birthday Aaksh” என்றாள் அழகாய் புன்னகைத்தபடியே. அரவிந்தும் அவனுக்கு வாழ்த்து தெரிவிக்க அவசரமாய்  "Thank you " என்றவனின் கண்கள் பரவசமாக  "wow.. Mom! you remember I wanted to buy this kit!! Yes! I love it “ என்றான்.


ஷோபாவும் சிரித்துக்கொண்டே " ஹ்ம்ம் காவ்யா.. யு ஆர் வெரி ஸ்மார்ட்.. you know who wants what..” என்றதும், தானும் புன்னகைத்துவிட்டு பெரிய உயர்தர சாக்லேட் பாக்ஸையும் எடுத்து ஆகாஷிடம் கொடுத்து "ப்ளீஸ் ஷேர் வித் ஆல் " என்றுவிட்டு எழ நினத்தவளை சட்டென்று யாரோ பிடித்து இழுப்பதாக உணர்ந்தவள் திரும்பி பார்க்க ரகுவின் மூன்று வயது மகள் " love you aunty" என்று  அவள் எதிர்பாராத தருணத்தில் காவ்யாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். 


குழந்தையின் அன்பில் ஆடிப்போனவள் அவளை வாரியணைத்து தானும் அவள் கன்னங்களில் முத்தமிட்டாள். காவ்யாவையும் குழந்தையும் ரசித்தவாறு நின்றிருந்த அரவிந்தனை பார்த்து எரிச்சலான மோனா, "ஷோபா, actually I have some work.. you guys carry on.. நான் இன்னொரு டைம் வரேன் " என்று வரவழைத்துக்கொண்டு மெல்லிய புன்னகையோடு சொல்ல, ஷோபாவும் "oh ok.. அப்போ கேக் கட் பண்ணிடலாம்.. ப்ளீஸ் இருந்து டின்னர் சாப்பிட்டு கிளம்பு மோனா "  என்றவாறு மற்ற ஏற்பாடுகளை கவனிக்க சென்றாள்.


அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த திலீப் அரவிந்தனை பார்த்ததும் "டேய் மச்சான்.. புது மாப்பிளை .. எப்படிடா இருக்க.. " என்று பெரிய சத்தத்துடன் பேசியவாறு  கீழிருந்து கையை அசைக்க "ஹாய் டா.. இதோ வரேன் “ என்றவன் "காவ்யா இவன் பேர் திலீப்.. நம்ம பாலாஜி பக்கத்துல இல்லாத குறைய இவன் தான் தீர்த்து வைப்பான்.. வா உன்ன introduce பண்றேன் " என்றவனிடம் "அத்தான் நீங்க போங்க நான் ஒரு 5 mins குழந்தைகளோட விளையாடிட்டு வந்திடுறேன் " என்றாள்.


"ஓகே" என்றவன் மோனாவும் அங்கிருப்பதை உணர்ந்து "சீக்கிரம் வந்துடு" என்றவாறு கீழே சென்றான்.


தானும் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தவளை "மோனா.. ஒரு நிமிஷம்.. நான் உங்களோட கொஞ்சம் பேசணும்.. பேசலாமா.. " என்றாள். சற்றே திடுக்கிட்டு 'என்ன பேசவேண்டும் என்னோடு இவளுக்கு.. ஒருவேளை அரவிந்தன் இங்கு நடந்ததை சொல்லியிருப்பானோ.. சே எத்தனை அவமானம் இவள் முன்' என்று எண்ணியவாறு "எங்கிட்டயா ? என்ன பேசணும் " என்று தயக்கத்துடன் கேட்டவளை "உட்காருங்க சொல்றேன்" என்றுவிட்டு தானும் அவளருகே அமர்ந்து அவள் கைகளை பற்றிகொண்டவள் "First of all, I am sorry Mona” என்றாள்.


"சாரியா? எதுக்கு " என்று குழப்பத்துடன் கேட்டவளை "மோனா, எனக்கு எல்லாமே தெரியும்.. அத்தான் எங்கிட்ட எல்லாமே சொல்லிட்டாரு.. அவருக்காக நீங்க உயிரை விட தயாரா இருந்தது அவரோட மனைவியா எனக்கு கஷ்டமா இருந்தாலும் ஒரு பொண்ணா உங்களோட வலியை என்னால புரிஞ்சிக்க முடியுது... உங்களோட விருப்பம் நிறைவேறாம போனதுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ நான் காரணமா போய்ட்டேன்.. என்ன மன்னிச்சிடுங்க...”


என்றதும் ஆச்சர்யத்துடன் அவளை பார்த்த மோனா 'என்ன பெண் இவள்.. தன் காதல் கணவனை நேசித்த இன்னொரு பெண் என்றவகையில் தன் மீது எரிச்சல் கொள்ளாமல் தன் நிலைக்காக ஒரு பெண்ணாக வருத்தப்படுகிறாளே.. இத்தனை நல்லவளாக கூட ஒரு பெண் இருக்க முடியுமா' என்று நினைத்தவள் 'ஹ்ம்ம் ஏன் பேசமாட்டாள்.. அரவிந்தன் இப்போது அவள் சொந்தமாயிற்றே' என்ற நினைப்பு வரவும் சட்டென்று அவளை வெல்லும் வகையில் "hey that is ok.. good he didn’t accept..thank God.. now I got married to one of the most prestegious men in Delhi.. அவர் குடும்பம் இண்டியால விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரங்கள்ல ஒண்ணு.. and I know very well.. Aravinth liked me.. I hope பேமிலிக்காகவும் உங்கள டிசப்பாய்ண்ட் பண்ண வேணாம்ன்னுதான் he said no to me.. but நல்லவேளை .. அரவிந்த் ஓகே சொல்லிருந்தா இந்த மாதிரி புடவைய சுத்திட்டு பரிதாபமா நானும் நின்னிருப்பேன்.. இப்போ I am wife of great .. “ என்று சொல்லி முடிப்பதற்குள் "மோனா.. என்ன problem உங்க வாழ்க்கையில?"  என்று அவள் கண்களை பார்த்து காவ்யா கேட்டதும் சற்றே தடுமாறி " வாட்? ப்ரோப்ளேமா என் வாழ்க்கைலயா? என்ன உளர்ர?" என்று ஒருமையில் ஆரம்பித்தாள்.


"Mona, seriously I felt bad for you.. அத்தானை கல்யாணம் பண்ணமுடியாம போனாலும் நீங்க இன்னொருத்தர் மனைவி.. நீங்க இப்போ பழசெல்லாம் கொஞ்சம் மறந்திருப்பீங்க.. இருந்தாலும் எங்களை சேர்த்து பாக்கும்போது உங்களுக்கு கஷ்டமா இருக்கும்ன்னு தான் உங்ககிட்ட சாரி சொன்னேன்.. பட் நீங்க நினைக்கிற மாதிரி அத்தான் குடும்பத்துக்காகவும் நான் ஆசைப்பட்டேன்ங்கறதுக்காகவும் மட்டும் என்னை கல்யாணம் பண்ணிக்கல.. அவர் மனசு முழுக்க நான்தான் இருக்கேன்.. அத யார் வந்தாலும் மாத்த முடியாது.. ஒருவேளை அவருக்கு என்னை பிடிக்காம போயிருந்திச்சின்னா, அவருக்கு பிடிச்ச பொண்ணோட சேர்த்து வைக்கறது தான் என்னோட முதல் வேலையா    இருந்திருக்கும்.. ஏன்னா நான் அவரை உண்மையா நேசிக்கிறேன்..எந்த நேரத்திலயும் அவரை தரக்குறைவா பேசியிருக்கமாட்டேன்.. என் அத்தான் பெரிய ராயல் பேமிலியா இல்லாம இருக்கலாம்.. ஆனா அவர் மனசுல நான்தான்  மகாராணி.. எனக்கு அதுபோதும்.. இப்பவும் சொல்றேன் உங்க லைஃப் நீங்க சொல்றமாதிரி இல்ல.. you are in trouble.. உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா எப்பவும் தயங்காம எங்களை கேட்கலாம் " என்று விட்டு விருட்டென்று வெளியில் சென்றவளை சற்றே பயம் கலந்த குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் மோனா. — with Jayanthi Venkat and 13 others.

உன்னிடம் மயங்குகிறேன் - 15

    அரைமணி நேரத்தில் வீடு திரும்பியவன் அவளது முகத்தை நேருக்குநேர் காணும் சக்தியில்லாமல் "காவ்யா.. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்...