அழகாய்
விடிந்தது ஞாயிற்றுக்கிழமை. எங்கிருந்தோ வந்த சிறு பறவையின் இனிய கீச் கீச்சென்ற சத்தம்
கேட்டு கண்விழித்தாள் காவ்யா. எதிரிலுள்ள சுவரில் மாட்டியிருந்த அழகிய கடிகாரம் காலை
மணி ஏழு எனக்காட்டியது.
நாலைந்து
நாட்களுக்குப்பின் இன்றுதான் அவளுக்கு அமெரிக்கா நேரம் செட்டானது போல தோன்றியது. தன்னை
சுற்றி வளைத்திருந்த அரவிந்தனின் கைகளை மெல்லிய நாணத்தோடு மெதுவாக விடுவித்துவிட்டு,
குழந்தையாய் அசந்து தூங்கிக் கொண்டிருப்பவனின் தலையை காதலோடு வருடி, நெற்றியில் மென்முத்தமிட்டாள்.
படுக்கையில்
எழுந்து உட்கார்ந்தவாறே கழுத்தில் தொங்கிய, இன்னமும் புது முறுக்கு கலையாத தங்க சங்கிலியில்
கோர்த்த தாலியை இரு கைகாளாலும் எடுத்து பார்த்து கொண்டவள் உடலில் ஒரு சிலிர்ப்பை
உணர்ந்தாள். ஒரு பெண்ணிற்கு இந்த தாலி எத்தனை விதமான உணர்வுகளை தருகிறது.
எத்தனை கௌரவத்தை அள்ளி தருகிறது.
சமீப
காலங்களில் தாலி பெண்ணடிமையின் சின்னமாக சிலரால் கருதப்பட்டாலும் கணவனை நேசிக்கும்
பெண்கள் இன்னமும் தாலியையும் நேசிக்கத்தான் செய்கிறார்கள்.. அதிலும் என் அத்தான்..
என் அன்பு அத்தானுக்காக தாலி என்ன பெரிய மலையை சுமக்க கூட நான் தயார்.. என்று நினைத்துக்கொண்டவள்
அவளது தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தாள்.
திருமணம்
முடிந்து இரண்டு மாதங்களுக்குள் அவர்கள் அமெரிக்காவுக்கு கிளம்ப வேண்டி இருந்ததாலும்
திருமணத்திற்கு பிறகு வரும் ஒற்றைப்படை மாதங்களில் தான் தாலி பிரித்து கோர்க்கவேண்டுமாதலாலும்,
தை மாதம் திருமணம் முடிந்த கையோடு அதே மாதத்தில் தாலி பிரித்து கோர்க்கும் விஷேசத்தையும்
விமரிசையாக நடத்தினர் பெரியவர்கள்.
காவ்யாவின்
வீட்டில் வைத்து முக்கியமான உறவினர்கள் மற்றும் ஊரிலுள்ள சுமங்கலிகளை அழைத்து திருப்தியாக
செய்தனர். திருமணம் முடிந்து பதினைந்து நாட்களிலேயே விஷேசம் வந்ததால், புதுபெண்ணுக்கேயுரிய
நாணத்தோடு காவ்யாவும் முகமெல்லாம் சிரிப்பாக அரவிந்த்தும் தம்பதியராக
மணப்பாயில் கிழக்கு முகம் பார்த்து அமர்ந்திருந்தனர்.
திருமணத்திற்கு
எடுத்து பட்டு புடவை மற்றும் வேஷ்டியையே உடுத்தவேண்டும் என்ற சம்பிரதாயத்தின்படி, அவர்கள்
அதே உடையில் இருந்தாலும் சிவகாமி பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும் புதுஉடைகள் எடுத்து
தாம்பாளத்தில் சீர் வரிசையோடு வைத்திருந்தாள்.
ஒவ்வொன்றும்
பார்த்து பார்த்து செய்த குடும்பத்தாரை நினைத்து மனம் நெகிழ்ந்து கண் கலங்கும் போதெல்லாம்
அரவிந்த் தான் ஆறுதல் சொல்வான்.
"காவ்யா..
அவங்க பொண்ணுக்கு அவங்க செய்றாங்க.. நீதான் இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்க.. அவங்க
எல்லாம் எப்பவும் போல இருக்காங்க.. நீ எப்பவும் இந்த வீட்டு இளவரசி தான்.. அதுவில்லாம
இப்போ என் பொண்டாட்டி.. உனக்கு செய்யாம யாருக்கு செய்யப்போறாங்க.. அத்தை மாமா முகத்துல
எவ்ளோ சந்தோசம் பாத்தியா? நீ இப்படி யோசிக்கறன்னு தெரிஞ்சாலே வருத்தப்படுவாங்க.
சந்தோஷமா இருடா.. " என்று அவ்வப்போது கிசுகிசுப்பாக சொல்லி அவள் மனதை மாற்றுவான்.
எத்தகைய
சூழ்நிலையிலும் தன் மனதை படித்துவிடுவதோடு அதற்கு மருந்தாகவும் இருக்கும் தன் கணவனை
நெஞ்சில் சுமப்பவளுக்கு அவளது தாலி ஒரு புனிதமான உணர்வைத்தர கண்களில் ஒற்றிக்கொண்டவள்,
ஒரு நிமிடம் கண்கள் மூடி அரவிந்த்காகவும் குடும்பத்தில் அனைவருக்காகவும் கடவுளிடம்
வேண்டிக்கொண்டாள்
இந்த
பழக்கம் அவளுக்கு அமிர்தம் அம்மாளிடம் இருந்து வந்திருந்தது. எப்போதும் அவர் எழும்போது
தாலியை கண்களில் ஒற்றிக்கொள்வதையும் ஒருநிமிடம் கண்மூடி வேண்டுவதையும் பார்த்து சிறுவயதிலேயே
ஒருநாள் கேட்டாள். "ஏன் பாட்டி, தூங்கி எழுந்ததும் தினமும் இந்த மாதிரி பண்ற?"
என்று கேட்டவளை கன்னத்தை தட்டி "காலையில எழுந்ததும் நம்ம மனசு இந்த உலகத்துல இருக்கற
கெட்ட ஷக்திகளோட ஆதிக்கம் இல்லாம பரிசுத்தமா இருக்கும்.. அந்த நேரத்துல நம்ம புருஷன்
நல்லபடியா இருக்கணும்னு நாம மனசார வேண்டிக்கிட்டோம்னா அவங்க நூறு வயசுக்கு நல்ல
ஆரோக்கியதோட சந்தோசமா இருப்பாங்க.. வீட்டு ஆம்பள சந்தோசமா இருந்தா அந்த வீடே சந்தோசமா
இருக்கும்.. நான் இதனை வருஷமா உங்க தாத்தாவுக்காக எழுந்ததும் வேண்டிக்குவேன்.. அதான்
உங்க தாத்தா ஜம்முன்னு ராஜா மாதிரி இருக்காரு" என்று சிரித்தவாறு சொன்னது அவள்
மனதில் ஆழ பதிந்திருந்தது.
கிட்டத்தட்ட
மறுநாளிலிருந்தே அரவிந்தனுக்காக காலையில் எழுந்ததும் வேண்டி கொள்ள தொடங்கியிருந்தாள்.
திருமணம்
முடிந்த மறுநாள் அவள் தூங்கி எழுந்ததும் முதன்முதலில் தாலியை கண்களில் ஒற்றிக்கொண்டு
அவள் வணங்கியதும் அவளை பார்த்து சிரித்த அரவிந்த் "மேடம் நீங்க ஒரு ME கிராஜுவேட்..
ஆனாலும் கல்யாணம் ஆகிடிச்சின்னா எல்லா பொண்ணுங்களும் இப்படித்தான் இல்ல ?" என்று
கலாய்த்தான். வெட்கம் முகத்தில் படர "இது பாட்டி என் சின்ன வயசுல சொன்னது அத்தான்..
அப்போலேர்ந்து நான் காலையில எழுந்ததும் உங்களுக்காக பிரே பண்ணிப்பேன்.. இப்போ கல்யாணம்
ஆனதும் தாலிய தொட்டு கும்பிடுறேன்.. நீங்க நூறு வயசுக்கு ஹெல்த்தியா ஹாப்பியா இருக்கணும்..
அதுதான் என் ஆசை" என்றவளை காதல் பெருக்கெடுத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்து
கொண்டான்.
சுகமான நினைவுகளில்
மூழ்கியவள், மெலிதாய் சிரித்துக்கொண்டு கட்டிலைவிட்டு எழுந்தாள். கடகடவென்று குளித்து
முடித்து, அவனுக்கு பிடித்த வெளிர் நீலநிற குர்தியில், ஈரக்கூந்தலை தளர்வாக கிளிப்
செய்து, நெற்றியில் சந்தனகீற்றோடு தேவதையாய் மின்னினாள்.
பூஜையறையில்
சாமி விளக்கேற்றி, அனைவருக்காகவும் வேண்டிக்கொண்டவள், இன்னும் அரவிந்த் தூங்கிக்கொண்டிருக்க,
மளமளவென்று அவனுக்கு பிடித்த இடியாப்பமும் தொட்டுக்கொள்ள காய்கறிகள் போட்ட பாயாவும்
செய்து ஹாட்பாக்ஸில் வைத்தாள்.
எதாவது
ஸ்வீட் செய்யலாம் என்று நினைத்தவள் வசந்தாவை போனில் அழைத்தாள். மருமகளின் எண்ணை பார்த்ததும்
முகமெல்லாம் பரவசமாய் "காவ்யா கண்ணு... எழுந்திட்டயாடா..எப்படிடா இருக்கீங்க"
என்றாள். வந்ததிலிருந்து தினமும் ஒரு தடவையாவது இருவர் வீட்டிற்கும் பேசி விடுவார்கள்.
அத்தையின்
முகத்தை வீடியோ காலில் பார்த்ததும் அவளது சிரிப்பு தன்னையும் தொற்றிக்கொள்ள "நல்லா
இருக்கோம் அத்தை.. நான் எழுந்து டிபன் பண்ணிட்டு இருக்கேன்.. அத்தான் இன்னும் தூங்கறாரு..
நல்லா தூங்கட்டும்ன்னு நானும் எழுப்பலை.. எதாவது ஸ்வீட் பண்ணலாம்னு இருக்கேன்.. அத்தானுக்கு
ரொம்ப பிடிச்ச ஸ்வீட் ஏதாவது சொல்லுங்க அத்தை" என்று மருமகள் கேட்டதும் சந்தோஷத்தில்
மனம் நிறைய "அவனுக்கு சர்க்கரை பொங்கல்ன்னா பிடிக்கும்டா. ஆனா நீ ஏன் கஷ்டப்படற..
இப்போதான் போய் கொஞ்சம் செட்டில் ஆகியிருக்கீங்க.. மெதுவா பண்ணலாம்டா.. நான்
சொன்னேன்னு சொன்னா என்னை திட்டினாலும் திட்டுவான் " என்றாள் சிரித்துக்கொண்டே.
"அதெல்லாம்
ஒண்ணும் கஷ்டம் இல்ல அத்தை.. அம்மா குக்கர்ல எப்படி பண்றதுன்னு சொல்லி கொடுத்திருக்காங்க..அப்பறம்
எல்லா சாமானும் இருக்கு.. நான் அதையே பண்ணிடுறேன்" என்றவளிடம் "சரிடா.. பார்த்து
பத்திரமா பண்ணு.. அடுப்படி மட்டும் பழக பழகத்தான் வரும்.. கவனமா பண்ணு.. அரவிந்த ஹெல்ப்புக்கு
கூப்பிட்டுக்கோ.. " என்ற அத்தையின் அன்பில் நெகிழ்ந்து "பரவாயில்ல
அத்தை.. அத்தான் பாவம்.. நாளைலேர்ந்து office போகணும் .. இந்த project ரொம்ப கஷ்டமானது
வேற .. நெறய வேலை இருக்கும் போல.. " என்று வருத்தத்துடன் சொன்ன மருமகளை நினைத்து
பெருமை பட்டுகொண்டாள் வசந்தா. என் மருமகளுக்குத்தான் என் மகன் மீது எத்தனை அக்கறை..
இந்த காதலும் அக்கறையும்தானே என் மகனுக்கு கிடைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.. கல்யாணம்
முடிந்ததும் என் மகன் முகத்தில் தான் எத்தனை சந்தோசம்.. பெற்றவளுக்கு இதற்கு மேல் என்ன
வேண்டும்.. எப்படியோ நான் நினைத்தபடி இவர்கள் கல்யாணம் நல்லபடியாக முடிந்தது.. கடவுளுக்கு
தான் நன்றி சொல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.
பிரஷர் குக்கரின்
விசில் சத்தத்தில் எழுந்தவன் கிச்சனில் களேபரமாக சமையல் நடந்து கொண்டிருப்பதை வீடு
முழுதும் வீசிய நெய்யின் நறுமணத்திலும் சிவகாமி அத்தை செய்யும் அதே குருமாவின் மசாலா
வாசத்திலும் அறிந்தவன் சிரித்தவாறே கிச்சனுக்கு சென்றான்.
விசில்
சத்தம் கேட்டு அத்தான் விழித்துக்கொண்டு விடுவாரோ என்று குக்கரின் அருகில் நின்று படபடப்போடு
விசில் நிற்கும் வரை டென்ஷனோடு நின்றிருந்தவளை மெதுவாய் நடந்து பின்பக்கமாக சென்று
அணைத்துக்கொண்டவன் "குட் மார்னிங்… வாசம் மூக்கை தொளைக்குது.. தனியா ஏன்டா இப்படி
கஷ்டப்படற.. என்ன எழுப்ப வேண்டியதுதானே" என்றவனின் சூடான மூச்சுக்காற்று காதோரம்பட்டு
அவளை கிறங்கடிக்க சுதாரித்து கொண்டு "அத்தான்.. Please போய் குளிச்சிட்டு
வாங்க .. உங்களுக்கு ஒரு surprise.. உங்களுக்கு பிடிச்ச ஒரு ஸ்வீட் பண்ணிட்டு
இருக்கேன்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. சீக்கிரம்.. " என்று அவனை பாத்ரூமிற்கு
தள்ளிக்கொண்டு போனாள்.
சிரித்தவாறே
பாத்ரூமிற்கு சென்று அவன் கதவை சாத்திக்கொள்ள , விட்ட இடத்திலிருந்து பொங்கலை
தொடர்ந்தாள். அவன் மீதுள்ள காதலை பொங்கலில் நெய்யிலும் முந்திரியிலும் காட்டியவள்
அனைத்தையும் எடுத்து டேபிளில் வைத்துவிட்டு அவனுக்காக காத்திருக்கையில் அரவிந்தனின்
போன் அடித்தது. எடுத்துப்பார்த்தவள் அது மோனாவிடமிருந்து என்பதை அறிந்ததும் அவளையுமறியாமல்
அவள் மனதின் ஓரத்தில் சிறு அச்சம் எட்டிப்பார்த்தது.
Nice episode. Lovely.👌👌
ReplyDeleteThanks Bharathi!!
DeleteWow semma narration dear, it took me my thali parchi kokora function, just rembered, awesome dear, y da ma last le twistu from mona.
ReplyDeleteGood to know Da.. Ha ha let us see what she is going to do 😊😊
DeleteSema narration dr,chance illa apdiyae video pakaramathiri iruku
ReplyDeleteThanks Dear 😊😊
DeleteVilli entry ah... Omg
ReplyDeleteSuper. Last le mona call. Konjam tension. Waiting for next episode.
ReplyDelete