Sunday, October 25, 2020

உன்னிடம் மயங்குகிறேன் - 3

 

சூட்கேசுகளை ஒன்றொன்றாய் பிரித்து, கொண்டு வந்த  பொருட்களை அதற்குரிய இடங்களில் அழகாய் அடுக்கி வைத்தாள் காவ்யா. அம்மாவும் அத்தையும் கொடுத்தனுப்பிய சாமி படங்களையும் பூஜை சாமான்களையும் இரண்டு பெட்ரூம்களில் சிறியதாக இருந்த ஒன்றில் ஒரு கப்போர்டில் அழகாய் அலங்கரித்து வைத்தாள்.

கையோடு கொண்டு வந்திருந்த தஞ்சாவூர் ஓவியங்களையும் காவ்யா வரைந்த  ஓவியங்களையும் அழகாய் ஹாலில்  இருவரும் சேர்ந்து நல்ல இடமாய் பார்த்து மாட்டினர். சமயலறைக்கு தேவையான பொருட்களையும் அடுக்கி வைத்தவள் இன்னும் வாங்கவேண்டியவற்றையும் குறித்துக்கொண்டாள். அவர்கள் உடைகள் அனைத்தையும் பெட்ரூம்களில் உள்ள கிளாஸ்ட்களில் இருவரும் கதைகள் பேசிக்கொண்டு அடுக்கிவைத்தனர்.

இரண்டு வருடங்களாக அவன் தங்கியிருந்த வீடு திடீரென மிகவும் அழகாக தோன்றியது அரவிந்தனுக்கு. "காவ்யா.. நீ என் வாழ்க்கையில வந்ததும் என் வாழ்க்கை எப்படி அழகா மாறிடிச்சோ, அதேமாதிரி நீ வந்ததும் இந்த வீடே அழகா மாறிடிச்சி" என்று அவள் கன்னத்தை செல்லமாய் பிடித்து கொஞ்சிக்கொண்டே சொன்னவன் போன் வரவும்  

 "ஒரு நிமிஷம்டா.. விவேக் கால் பண்றாரு.. பேசிட்டு வந்துடுறேன் " என்றுவிட்டு எடுத்து பேசினான். விவேக் அரவிந்தைவிட ஏழேட்டு வயது மூத்தவன்.  திருமணமாகி இரு குழந்தைகளுடன் அமெரிக்கா வந்து ஆறு மாதங்கள் ஆகின்றது.

"ஹாய் விவேக்.. சொல்லுங்க.. எப்படி இருக்கீங்க?" என்றான்.

"நான் என்னப்பா சொல்ரது.. நீதான் புது மாப்ள.. நீ எப்படி இருக்க"  என்றதும்

தன்னிச்சையாக வெட்கம் எட்டிப்பார்க்க "நான் நல்லா இருக்கேன்.. இன்னைக்குத்தான் கொஞ்சம் ஜெட்லாக் நார்மலா இருக்கு.. சோ திங்ஸ் எல்லாம்  அரேஞ் பண்ணிட்டு இருக்கோம்" என்றான்.

"சரிப்பா.. நாங்க இப்போதான் அட்லாண்டாலேர்ந்து வந்தோம்.. வந்ததும் உனக்குத்தான் கால் பண்றேன்.. நீங்க வர்ற நேரம் நாங்க ஊர்ல இல்லாம போய்ட்டோம்.. இப்போலேர்ந்து நீங்க செட்டில் ஆகுறவரை நம்ம வீட்லதான் சாப்பாடு.. காவ்யாவ கஷ்ட படவேணாமுன்னு சொல்லு.. கயல் ஏற்கனவே சொல்லிட்டா.. இன்னிக்கு நைட் டின்னருக்கு வந்திருங்கப்பா.. காவ்யாகிட்டயும் சொல்லிரு " என்றுவிட்டு  போனை வைத்தான்.

அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு, கூட வேலை பார்ப்பவர்களும் ஒரே கம்யூனிட்டியில் இருப்பவர்களும் தன் குழந்தைகளின் நண்பர்களின் குடும்பங்களும் ஒரே ஊர்காரர்களும் தான் சொந்தங்கள்.. ரத்த சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒருவருக்கொருவர் துணையாய் சந்தோஷத்திலும் துக்கத்திலும் பங்கெடுத்துக்கொள்வர்.

அரவிந்த் யூனிவெர்சிடியில் படிக்கும்போது அவனது நண்பர்கள் ஒரு பெரிய கூட்டமாய் இருந்தனர். பெரும்பாலானோர் கலிஃபோர்னியாவிலேயே செட்டில் ஆக, அரவிந்த் மட்டும் இந்தியாவில் வேலையில் சேர்ந்தான்.  ஆனால் விதி யாரை விட்டது.. அவனும் வேலை விஷயமாக அமெரிக்கா வரும்படி ஆனது. அவனது கிளையண்ட் ஆபீஸ் நியூயார்க் என்பதனால் அருகிலுள்ள மாகாணமான நியூஜெர்ஸியில் தங்கியிருந்தான்.

ரகு அவனுக்கு புதிய ப்ரொஜெக்ட்டை அசைன் செய்ததும் அதே வீட்டுக்கு  இன்னும் இரண்டு வருடங்களுக்கு லீஸை எக்ஸ்டெண்ட் செய்திருந்தான். அந்த கம்யூனிட்டி புதிதாய் கட்டப்பட்டிருந்தது... அதுவுமில்லாமல் lakeview எனப்படும் ஏரிக்கரை ஓரமாய் மரங்கள் சூழ்ந்து பார்ப்பதற்கும் மிகவும் ரம்மியமாய் இருக்கும். காவ்யாவுக்கும் மிகவும் பிடிக்கும் என நினைத்தான்.

அடுத்தடுத்த வீடுகளில் இந்திய குடும்பங்களும் அதிலும் நிறைய தமிழ் குடும்பங்கள் இருந்ததால் காவ்யாவுக்கு பேச்சுத்துணைக்கும் ஆள் இருக்கும் என்று அங்கேயே இருக்க முடிவு செய்தான். விவேக்கின் வீடு அதே கம்யூனிட்டியில்அடுத்த பிளாக்கில் இருந்தது.

ரகு மட்டும் கொஞ்சம் தள்ளி சிங்கள் பேமிலி ஹோம் எனப்படும் பெரிய வீட்டில் இருந்தான். அவன் கிரீன் கார்ட் ஹோல்டர் என்பதாலும் இங்கேயே செட்டில் ஆகும் பிளானில் இருப்பதாலும் கணவன் மனைவி இருவரும் பெரிய பதவிகளில் இருப்பதாலும் அவர்கள் வீடு பெரிதாகவே இருந்தது. இவர்கள் டீமில் எதாவது பார்ட்டி என்றால் மட்டும் ரகுவின் வீட்டில் வைத்து நடக்கும்.

 விவேக்கிடம் பேசிவிட்டுவைத்தவனிடம் "அத்தான் டீ சாப்பிடுங்க " என்றபடியே கைகளில் இரண்டு தேனீர் கோப்பைகளோடு வந்தவள் அவனிடம் ஒன்றை நீட்டினாள்.

காலையிலேயே குளித்து அழகிய வெளிர் மஞ்சள் நிற சுடிதாரில் லூஸ் ஹேரில் இருந்தவளை ரசித்துக்கொண்டே "என் அழகு பொண்டாட்டி.. இப்போதான் ஒரு டீ குடிச்சா நல்லா இருக்கும்னு நெனச்சேன். கையில டீயோட வர .." என்று கப்பை வாங்கிக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட, வெட்கத்தோடு "அத்தான் காலைலேர்ந்து இது 59 வது முத்தம்.. இன்னும் இன்னைக்கு எத்தனை மிச்சமிருக்கு.. " என்று வேண்டுமென்றே அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

"அடிப்பாவி நான் ஆசையா குடுக்குற முத்தத்தை எண்ணிட்டா இருக்க.. நடுவுல கேப் விட்டாதான எண்ணுவ.. உன்ன " என்றவன் அவளை இழுத்து பிடித்து முத்தமழை பொழிந்தான்.

"ஐயோ அத்தான் பால்கனி டோர் திறந்திருக்கு .. யாராவது பாக்க போறாங்க " என்று அவள் உதடுகள் சொன்னாலும் மனம் அவனது குறும்பை ரசித்தது. அவள் கொண்டு வந்த சூடான இஞ்சி டீ கோப்பைகளில் ஆறி கொண்டிருந்தது.

ணி ஐந்தானதும் இருவரும் வெளியே கிளம்பினர். அந்த மெட்டாலிக் சில்வர் BMW வில் ஸ்டைலாக அமர்ந்து டிரைவ் செய்யும் கணவனை பெருமையோடு பார்த்தவள் அமெரிக்காவின் ரோடுகளையும் பச்சை பசேலென மரங்களையும் ரசித்துக்கொண்டே வந்தாள்.

சிறு குழந்தையின் உற்சாகத்துடன் அனைத்தையும் ரசித்துக்கொண்டு அவனோடு பேசிக்கொண்டு வந்தவளை காதலோடு பார்த்தவன் "காவ்யா.. நீ சந்தோஷமா இருக்கியா.. உன்ன நான் நல்லா பாத்துக்கிறேனே ?" என்றான் திடீரென.

சட்டென்று சிரிப்பு வடிந்து கண்கள் காதலை ஏந்திக்கொள்ள "ஏன் அத்தான் இப்படி கேக்குறீங்க.. என்னைவிட எந்த பொண்ணும் இவ்ளோ சந்தோசமா இருப்பாளான்னு எனக்கு தெரியல.. மனசுக்கு பிடிச்ச கண் நிறைஞ்ச புருஷன்..என்னை அவங்க பொண்ணா நெனச்சி தாங்குற அத்தை மாமா, என் மேல உயிரையே வச்சிருக்கிற அம்மா அப்பா தாத்தா பாட்டி இன்னும் வேற என்ன அத்தான் ஒரு பொண்ணுக்கு வேணும்.. நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்.. என் வாழ்க்கை முழுசும் உங்களுக்கு நல்ல மனைவியா இருக்கணும்.. அது மட்டும் தான் என் மனசுல ஓடிட்டு இருக்கு "  என்றாள்.

"கேட்கவே சந்தோசமா இருக்கு காவ்யா.. ஆனா எப்பவும் எதுக்காகவும் என்கிட்ட தயங்காத.. இந்த கல்யாணம் தாலி புருஷன் பொண்டாட்டி எல்லாமே இந்த உலகத்துக்காகத்தான்.. மத்தபடி நான் எப்பவும் உன்னோட அதே அத்தான் தான்.. நீ என்ன நினைக்கிறாயோ அத பண்றதுக்கு உனக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு..எனக்காக நீ எதையும் மாத்தக்கூடாது எதையும் இழக்கக்கூடாது .. சரியா?" என்றவன் ஒரு கையால் டிரைவ் செய்துகொண்டே மறுகையை அவளது கையோடு கோர்த்துக்கொண்டான்.

து நியூஜெர்ஸியின் பெரிய மால். மிகவும் பிரமாண்டமாய் நூற்றுக்கணக்கான கடைகள் அணிவகுத்து நிற்க அங்கு கிடைக்காதவையே இல்லை என்ற அளவுக்கு அனைத்து உயர்தர பொருட்களும் குவிந்து கிடந்தன. பார்த்து பார்த்து அமெரிக்க வாழ்க்கைக்கு அவளுக்கு தேவையான பொருட்களை தேடி தேடி வாங்கினான். ஒவ்வொன்றயும் பார்த்து ஆச்சர்யபட்டவளுக்கு அனைத்தையும் விளக்கிச்சொன்னான். விவேக் வீட்டிற்கு டின்னருக்கு போவதால் அவன் குழந்தைகளின் வயதுக்கேற்ப விளையாட்டு பொருட்களையும் சாக்லேட்டுகளையும் வாங்கிகொண்டவனை ஆசையாய் பார்த்தாள் காவ்யா. எத்தனை பக்குவம் இந்த வயதில் இந்த அத்தானுக்கு என்று அவனை அணைத்துக்கொண்டு கைகள் கோர்த்து நடந்தாள்.

தன் ஆசை மனைவி தன்னோடு கைகோர்த்து நடப்பது புது தெம்பைதர ஏனோ அவனுக்கு அவள் வரைந்த அவனது ஓவியம் நினைவுக்கு வந்தது. ஆம்.. மனைவின் அன்பை வென்றவன் உண்மையில் ராஜகுமாரன்தான் என்று நினைத்து சிரித்துக்கொண்டவன் கம்பீரமாய் உணர்ந்தான்.

விவேக்கின் வீட்டில் நுழையும்போது மணி எட்டாகியிருந்தது. விவேக் கதவைத்திறந்து "வாங்க வாங்க " என்று முகமெல்லாம் சிரிப்போடு வரவேற்க உள்ளேயிருந்து வேகமாக வந்த விவேக்கின் மனைவி கயல்விழி, "வாங்க புது பொண்ணு புது மாப்பிள்ளை" என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள். கதவை திறந்ததும் ரசத்தின் வாசம் மூக்கைத்துளைக்க காவ்யாவுக்கு எங்கோ தமிழ்நாட்டில் நுழைவதைப்போலிருந்தது.

அரவிந்த் ஸ்நேகமாய் சிரித்துக்கொண்டே "அக்கா எப்படி இருக்கீங்க.. அப்பறம் இதுதான் காவ்யா.. காவ்யா .. இவங்க தான் விவேக் அண்ட் கயல்விழி அக்கா. " என்று அறிமுகப்படுத்தினான். பட்டென்று "காவ்யா .. நீ என்னமா அழகா இருக்க.. இந்த அரவிந்த் இவ்ளோ ஸ்மார்ட்டா இருக்காப்லயே.. பொண்ணு எப்படி இருக்குமோன்னு நெனச்சேன்.. நீதான் தம்பியைவிட சூப்பரா இருக்க" என்று வெள்ளந்தியாய் சொன்னவள் "உள்ள வாம்மா " என்று அழைத்து சென்றாள்.  சட்டென்று ஒருமையில் அழைத்தாலும் அவளது வெள்ளந்திக்குணம் காவ்யாவுக்கும் பிடித்துத்தான் போனது. அவர்களின் எட்டு வயது பையனும் மூன்று வயது பொண்ணும் வந்து அரவிந்தனிடம் ஒட்டிக்கொண்டனர். அவர்களிடம் "இவங்கதான் காவ்யா அத்தை.. இனிமே இவங்களும் உங்க friend சரியா " என்று அரவிந்த் சொன்னதும் காவ்யா அவர்களை அருகே அழைத்து அவர்களுக்கென்று வாங்கி வந்ததை கொடுத்து "ஹாய் " என்றாள். அவளிடம் எட்டு வயது வால் "where is your baby aunty?" என்று கேட்டதும் கயல் "இவன் ஒருத்தன்.. யாராவது கப்புலா வந்தா மொதல்ல பேபி பத்தி கேட்ருவான்" என்றாள் சிரித்துக்கொண்டே. அரவிந்த் காவ்யாவை பார்த்து சிரிக்க அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

அனைவரும் சோபாவில் அமர்ந்து நலம் விசாரிப்புகள் , அவர்கள் திருமணம் மற்றும் மற்ற நண்பர்கள் என பேச்சு அங்குமிங்குமாய் சென்று கடைசியில் "சரி வாங்க சாப்பிடலாம்.. “ என்று டைனிங் டேபுளுக்கு அழைத்து சென்றனர்.

விவேக்கும் கயல்விழியும் மதுரையை சேர்ந்தவர்கள் என்பதால் சமையல் காரசாரமாக காவ்யா வீட்டு சாப்பாடு போலவே  இருந்தது. நிறைய ஐட்டங்கள்  அதுவும் மிகவும் சுவையாய் செய்திருந்தாள் கயல்.  காவ்யா அவளை மனதார "அக்கா, ரொம்ப நல்லா சமைச்சிருக்கீங்க.. அப்படியே எங்க அம்மா செஞ்ச மாதிரி இருக்கு.. பாவம் அத்தான் இந்த மூணு நாலா சரியாவே சாப்பிடல.. இன்னிக்குதான் நல்லா சாப்பிட்டாரு.. அதுவும் அந்த மாங்கா தொக்கும் வெண்டைக்காய் பச்சடியும் ரசிச்சு சாப்பிட்டாரு.. அது எப்படி பண்ணீங்கன்னு சொல்லுங்கக்கா.. நான் நோட் பண்ணிக்கறேன்.. " என்று ஆசையாய் கேட்டவளை கயலுக்கும் மிகவும் பிடித்துப்போனது.  

 

சாப்பிட்டு முடித்ததும் குழந்தைகள் உறங்கிப்போயிருக்க ஆண்கள் இருவரும் பால்கனியில் உட்கார்ந்து அலுவலகம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

 

ஹாலில் அமர்ந்து காவ்யாவும் கயலும் அவரவர் குடும்பங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அரவிந்தனை பற்றி பேசும்போது அவளின் கண்களில் ஒளி கூடுவதை கவனித்த கயல் அவளுக்கு அரவிந்தன் மீதுள்ள அளவில்லா காதல் புரிந்தது. மெதுவாக "காவ்யா... அரவிந்த் ரொம்ப நல்ல பையன்.. நீ ரொம்ப குடுத்து வச்சவ.. என் வீட்டுக்காரருக்கு அவ்ளோ சாமர்த்தியம் பத்தாது.. ஆனா அமெரிக்கா வரணும்னு ரொம்ப ஆசை.. அரவிந்த் மட்டும் ரெகமெண்ட் பண்ணலேன்னா நாங்க வந்திருக்கவே முடியாது.. அதுவுமில்லாம இங்க வந்தும் இவருக்காக நெறைய ஹெல்ப் செஞ்சிருக்காப்ல .. அரவிந்த் பொதுவா எல்லாருக்கும் நல்லா ஹெல்ப் பண்ணுவாரு போல .. அதனால கொஞ்சம் பிரச்சனைல மாட்டியிருக்காரு.." என்றதும் சற்று பதட்டத்துடன் "என்னக்கா சொல்றீங்க?" என்றாள்.

"காவ்யா நான் சொல்றத உன் மனசோட வச்சிக்கோ.. இவங்க டீம்ல மோனான்னு ஒரு நார்த் இந்தியன் பொண்ணு இருக்கு.. அந்த பொண்ணு புதுசா வந்தப்போ அரவிந்த் நெறய ஹெல்ப் பண்ணியிருக்காரு..கொஞ்ச நாள்ல அந்த பொண்ணுக்கு இவரை பிடிச்சி போய் ப்ரொபோஸ் பண்ணியிருக்கா.. இவரு மறுத்துட்டாரு போல.. அந்த பொண்ணு இன்னும் இங்கதான் இருக்கா.. பாத்து இருந்துக்கோ.. இத ஏன் உன்கிட்ட சொல்றேன்னா நீ நம்ம பக்கத்து பொண்ணு.. அரவிந்த் ஆளு அம்சமா இருக்காரு.. நீதான் ஜாக்கிரதையா இருக்கணும்.. இதையெல்லாம் அவருகிட்ட கேட்டுக்காத" என்று சொல்லிமுடிக்கவும் அரவிந்தும் விவேக்கும் அங்கு வரவும் சரியா இருந்தது.

அரவிந்த் காவ்யாவிடம் "காவ்யா கிளம்பலாமா.. அக்காவும் நீயும் தினமும் மீட் பண்ணி பேசிக்கோங்க.. இப்போ ரொம்ப லேட் ஆகிடிச்சி" என்றான் சிரித்துக்கொண்டே.

"ஹ்ம்ம்  போலாம் அத்தான்.. "  என்று  சொன்னவளின் முகம் வாடியிருப்பதை கவனித்த அரவிந்த் யோசனையாய் அவர்களிடம்  சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

 

காரில் ஏறியவளின் முகம் இன்னமும் கலக்கமாக இருப்பதாய் அறிந்தவன் எதோ தவறாக இருப்பதாக உணர்ந்தான். ஒரு நிமிடம் வாய் ஓயாமல் எதைப்பற்றியாவது தன்னிடம் பேசிக்கொண்டிருப்பவள் அமைதியாக இருப்பது அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. மெதுவாக "என்னடா.. டயர்டா இருக்கா?" என்று ஆரம்பித்தான்.

 

"இல்லை அத்தான்.. அதெல்லாம் ஒண்ணுமில்ல" என்றவள் மனதில் புழுங்கிக்கொண்டிருந்தாள். அத்தான் தன்னைத்தவிர யாரையும் ஏறெடுத்து பார்க்கமாட்டார் என்பதை அறிந்திருந்தாலும் ஏன் தன்னிடமிருந்து மறைக்கவேண்டும்.. கண்களில் கண்ணீர் முட்டிகொண்டுவர கட்டுப்படுத்திக்கொண்டாள்.

வீட்டை அடைந்ததும் இறுக்கமாய் அணைத்தவனை "சாரி அத்தான்.. எனக்கு தூக்கமா வருது.. நான் போய் படுத்துக்கவா " என்றதும் கண்டிப்பாக எதோ நடந்திருக்கிறது என்று எண்ணியவனாக "காவ்யா.. ஒரு நிமிஷம் உட்காரு.. " என்று அங்கிருந்த சோபாவில் அவளை அமரவைத்து அருகில் அமர்ந்தான்.

"என்ன ஆச்சி சொல்லு? நீ எதையோ நெனச்சி கஷ்டப்பட்டுட்டு இருக்கன்னு எனக்கு நல்லா தெரியுது..ப்ளீஸ் எதுவா இருந்தாலும் சொல்லு " என்று கண்களை பார்த்து கேட்டவனை பார்த்ததும் கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் வழிய அதற்குமேல் பொறுக்கமுடியாமல் "அத்தான் மோனா பத்தி நீங்க என்கிட்ட ஏன் சொல்லலைன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு " என்றதும் பக்கென்று சிரித்தான்.

 "யாரு கயல் அக்கா சொன்னாங்களா.. லூசுப்பொண்ணே.. சரி நீ என்ன நினைக்கிற சொல்லு?" என்று சிரித்துக்கொண்டே அவள் கண்களை துடைத்தவாறு கேட்டான்.

"எனக்கு தெரியும் நீங்க என்னைத்தவிர யாரையும் லவ் பண்ணலன்னு.. ஆனா நீங்க என்கிட்ட இதுவரை எதையும் மறைச்சதில்லைன்னு நினைச்சேன் .. ஆனா " என்று மீண்டும் கண்களிலிருந்து கண்ணீர் கசிய சொன்னவளை அருகில் வந்து அணைத்துக்கொண்டான்.

 

"காவ்யா.. நம்ம ரெண்டு பேருக்கு என்ன தேவையோ அந்த விஷயங்களை நான் எப்பவும் உன்கிட்ட மறைச்சதில்லை .. இனிமேயும் மறைக்கமாட்டேன்.. ஆனா பொண்ணுங்க என்ன சைட் அடிச்சதையும் ப்ரொபோஸ் பண்ணதையும் உன்கிட்ட சொல்லி உன் மனச கஷடப்படுத்தவேணானும்னுதான் உன்கிட்ட சொன்னதில்லை.. "என்றதும் உரிமையாய் அவன் நெஞ்சில் சாய்ந்து படுத்து கொண்டவள் "யாரெல்லாம் உங்கள சைட் அடிச்சாங்க சொல்லுங்க " என்றாள்.

 

"ஹ்ம்ம் அப்படியா.. அப்போ சரி.. மொதல்ல தஞ்சாவூர்லேர்ந்து ஆரம்பிப்போம்... எங்க பக்கத்து வீட்டுல சுமதி இருக்காளே அவ " என்றதும் டக்கென்று எழுந்து "சுமதியா ..நான் உங்கள லவ் பண்ணது அவளுக்கு நல்லா தெரியும்.. இருந்தாலும் உங்கள சைட் அடிச்சாளா.. அவளுக்கு இருக்கு " என்று சீரியஸா சொன்னவளை பார்த்ததும் அவனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

"அதுக்கப்புறம் எங்கூட காலேஜிலே படிச்ச ஒரு பொண்ணு.. அதுக்கப்பறம் MS  படிக்கிறப்போ ஒரு பொண்ணு அப்பறம் இந்த மோனா .. அவ்ளோதான் " என்றான் பொய்யான வருத்தத்துடன். "அத்தான் விளையாடாதீங்க .. ஏன் இவங்களையெல்லாம் விட்டுட்டு என்ன லவ் பண்ணீங்க" என்று விடாப்பிடியாய் கேட்டாள்.

"ஹே லூசு.. ஊர்ல தேவதை மாதிரி ஒரு பொண்டாட்டிய வச்சிட்டு எவனாவது இன்னொரு பொண்ண லவ் பண்ணுவானா.. என்னை பொறுத்தவரை நீ எப்போவோ என் மனைவி ஆகிட்ட.. நான் எப்படி வேற யாருக்கும் ஓகே சொல்ல முடியும்.. ஒருவேளை நம்ம கல்யாணம் நடக்காம போயிருந்தாக்கூட இன்னொரு பொண்ணு என் lifela  வந்திருப்பாளான்னு தெரியல.." என்றதும் கண்கள் கலங்க "சாரி அத்தான்.. நீங்க எப்பவும் சொல்றமாதிரி நான் லூசுதான்.. உங்களைப்போய் இப்படி சொல்லிட்டேன் ..ப்ளீஸ் அத்தான் இந்த மாதிரி இனிமே பேசமாட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க " என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

ஆதரவாய் அவளை அணைத்துக்கொண்டவன் மனதில் மோனாவை நினைத்து சற்றே சஞ்சலமானான்.

11 comments:

உன்னிடம் மயங்குகிறேன் - 15

    அரைமணி நேரத்தில் வீடு திரும்பியவன் அவளது முகத்தை நேருக்குநேர் காணும் சக்தியில்லாமல் "காவ்யா.. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்...