Sunday, March 21, 2021

உன்னிடம் மயங்குகிறேன் - 10

  

முதல் நாள் என்பதால் ப்ராஜெக்ட் மேனேஜர், ப்ராடக்ட் ஓனர் அவர்களோடு மீட்டிங்ஸ் மற்றும் சில டீம் மீட்டிங்ஸ் என்று முற்பகல் முழுதும் ஓடியிருக்க கிடைத்த முப்பது நிமிடங்களில் அவரசமாக செல்போனை எடுத்து பார்த்தான் அரவிந்தன். அவன் பிஸியாக இருப்பான் என்பதை தெரிந்து போன் எதுவும் செய்யாமல் வாட்சப்பில் நிறைய மெசேஜஸ் அனுப்பியிருந்தாள் காவ்யா.

"அத்தான்.. முதல் நாள் வேலை எப்படி இருக்கிறது?"

"தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்"

"லஞ்ச் சாப்பிட்டாச்சா? தயிர்சாதம் கீழ் அடுக்கில் இருக்கிறது.. மறக்காமல் சாப்பிடுங்கள்.. வெஜ் சாலட் மிச்சம் வைக்காமல் சாப்பிடுங்கள்"

என்று ஒவ்வொன்றிலும் அவளுக்கு அவன் மீதுள்ள அக்கறை பளிச்சிட, சற்றே முகத்தில் படர்ந்த புன்னகையுடன் அவளுக்கு கால் செய்தான். போன் அடித்ததும் சட்டென்று எடுத்ததிலிருந்து தெரிந்தது அவனது போனை எதிர்பார்த்து காத்திருக்கிறாள் என்பது.

"ஹாய்டா.. என்ன பண்ற? சாரிடா..காலைல வந்ததிலிலிருந்து வரிசையா மீட்டிங்ஸ்.. முடிஞ்சதும் உடனே உனக்கு கால் பண்றேன்.. "என்று மெதுவாய் கிசுகித்தவன் "நீ சாப்பிட்டியா? தனியா இருக்கறது கஷ்டமா இருக்கா? ஒண்ணும் பயம் இல்லையே" என்று கரிசனத்துடன் அடுக்கிக்கொண்டே போனான்.

"நீங்க பக்கத்துல இல்லாதது கஷ்டமாத்தான் இருக்கு.. பட் அப்படியே அம்மா அப்பாட்ட பேசுனேன்.. ப்ரவீண்க்கு மாக்ஸ் சொல்லிக்கொடுத்தேன்.. அத்தைகிட்ட பேசுனேன்.. அப்பறம் ஹேமா கால் பண்ணி பேசிகிட்டு இருந்தா.. சோ அப்படியே டைம் போய்டிச்சி அத்தான்.. ஆனா என்னோட கல்யாணமான பிரண்ட்ஸ் சொன்னது சரியாய் போச்சி " என்று இழுத்தாள்.

"என்ன சொன்னாங்க உன் பிரண்ட்ஸ்?" குறும்பாய் சிரித்துக்கொண்டவன் அவள் என்ன சொல்வாள் என்று ஓரளவு கணித்திருந்தான்.

"இந்த பசங்க எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி தான் நம்மள நினைச்சி உருகுவாங்க.. கல்யாணம் ஆச்சுன்னா அவ்ளோதான்.. வேலை அப்பறம் அவங்க பிரண்ட்ஸ்ன்னு நம்மள டீல்ல விட்ருவாங்க.. நாமதான் அவங்களுக்காக உருகணும்ன்னு சொன்னாங்க .. சரியாதான் இருக்கு" என்றாள் பொய்யான  கவலையுடன்.

"ஹே நிஜமா சொல்லு.. நான் உனக்காக எவ்ளோ உருகுறேன்னு உனக்கு தெரியாது? "மயக்கும் குரலில் அவன் கேட்டதும் வெட்கத்தில் முகம் சிவக்க "ஹ்ம்ம் தெரியும் அத்தான்.. சும்மா சொன்னேன்" என்று சிரித்துக்கொண்டாள். "சரிடா.. நீ சாப்பிடு.. நானும் சாப்பிட்டுட்டு இன்னும் 10 மினிட்ஸ்ல இன்னோர் மீட்டிங் இருக்கு.. அதுக்கு போறேன்.. வந்திட்டு கால் பண்றேன்" என்று சத்தமில்லாத முத்தம் பதித்துவிட்டு போனை வைத்தான்.

மணி நான்கை தொட்டிருக்க அன்றைய மீட்டிங்ஸ் எல்லாம் முடிந்திருந்தது. மீதி வேலையை வீட்டிற்கு போய் கூட செய்து கொள்ளலாம் என்று நினைத்தவன் காவ்யாவிற்கு கால் செய்ய நினைத்தான். சட்டென்று நினைவு வந்தவனாக தீடீரென்று போய் நின்று அவளை அசத்துவோம் என்றெண்ணியவாறே லேப்டாப்பை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அவனுக்கு பிடித்த பாடலை ஹம் செய்தவாறு காரை ஸ்டார்ட் செய்தவன் காலையில் அப்பா சொன்னது நினைவு வந்ததும் முகத்தில் மகிழ்ச்சி முற்றிலும் வடிந்து அன்று நடந்தவற்றை பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

அன்று ஜோசியர் வந்து இருவருக்கும் அனைத்து பொருத்தங்களும் சிறப்பாக இருக்கிறதென்று சொன்னதும் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, அரவிந்தனும் காவ்யாவும் மேகத்தில் பறந்து கொண்டிருந்தனர். அத்தனை பிரச்சனைகளையும் தாண்டி ஒருவழியாக அனைவரும் ஆசைப்பட்டபடி தன் வாழ்க்கை காவ்யாவோடுதான் என்று முடிவானதும் அரவிந்தின் கால்கள் தரையிலேயே இல்லை. முகமெல்லாம் சிரிப்பாக அதுவும் அன்றே நிச்சயத்திற்கு தேவையான நகை ஜவுளி அனைத்தும் வாங்கி முடிக்க, கல்யாணக்களை இருவருக்கும் அப்போதே வந்துவிட்டுருந்தது. மகனை முகம் முழுதும் சந்தோசமாக பார்ப்பது சுகுமாரனுக்கு ஆனந்தத்தை அளித்தாலும் தன் மனதை அரித்துக்கொண்டிருக்கும் விஷயத்தை பற்றி அவனிடம் சொல்வதுதான் சரியென்று வசந்தாவிடம் வடிவு வருவதைப்பற்றி அரவிந்திடம் பேசி கவனமாக இருக்கச்சொல்லிவிட்டு வருகிறேன் என்று மொட்டைமாடிக்கு வந்தார். ஷாப்பிங் முடிந்து வந்த களைப்பு தீர குளித்து விட்டு மொட்டைமாடியில் நடந்துகொண்டே நண்பனிடம் போனில் பேசிக்கொண்டிருந்தவன் தந்தையை கண்டதும் "டேய்..நாளைக்கு பேசறேன்" என்று விட்டு வைத்தான். மகனை பார்த்து புன்புறுவலுடன் மெதுவாக தன் அக்கா அவளது மகளை கூட்டிக்கொண்டு வருவதை பற்றியும் அது அவருக்கு சிறு கலக்கத்தை தருவத்தைப்பற்றியும் சொன்னபோது, அரவிந்தன் சிரித்துக்கொண்டே "அப்பா.. நீங்க எதையும் நினைச்சி கவலைபடாதீங்க.. அத்தைய நான் பாத்துக்குறேன்.. என் மேல அவங்களுக்கு தனிப்பாசம் இருக்கு.. நான் சொன்னா கேப்பாங்க.. அவங்களால காவ்யாவுக்கோ அம்மாவுக்கோ வேற யாருக்குமோ ப்ராப்லம் வராம நான் பாத்துக்குறேன்.. நீங்க கவலைப்படாதீங்க" என்று தேற்றினான்.

மகனின் வார்த்தையில் சற்றே மனம் தெளிந்தவர் இன்னமும் தயங்கியவாறே "அது மட்டுமில்லப்பா.. இன்னொரு விஷயம். இது வீட்ல வேற யாருக்கும் தெரிய வேண்டாம். தெரியவும் கூடாது. முக்கியமா அம்மாவுக்கு தெரியக்கூடாது" என்றதும் அரவிந்தனுக்கு மனம் திக்கென்று அடித்துக்கொண்டது. அவனுக்கு தெரிந்து தன் அம்மாவுக்கு தெரியாமல் அப்பா எதுவும் செய்வதில்லை. அவருக்கென்று எந்த ரகசியமும் இல்லையென்று நினைத்திருந்தவன் காவ்யா விஷயத்தில் அது பொய்த்துப்போனது தெரிந்து ஏற்கனவே அதிர்ந்திருந்தான். காவ்யாவிற்கு தன் பெற்றோர் பற்றிய உண்மை தெரியும் என்பதை மறைத்தல்லவா வைத்திருந்தார். ஆனால் அதிலும் ஒரு ஞாயம் இருந்தது. ஆனால் இப்போது என்னவாக இருக்கும் என்று அவன் இதயம் அடித்துக்கொண்டாலும் தந்தையிடம் பொறுமையாக "எதுவா இருந்தாலும்  சொல்லுங்கப்பா.." என்றான்.

 

4 comments:

  1. Super Kanchu, yes waiting for the next suspense!

    ReplyDelete
  2. Each episode is nice and interesting in its own way. Awesome Kanchana 👌👌👏👏

    ReplyDelete

உன்னிடம் மயங்குகிறேன் - 15

    அரைமணி நேரத்தில் வீடு திரும்பியவன் அவளது முகத்தை நேருக்குநேர் காணும் சக்தியில்லாமல் "காவ்யா.. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்...