Thursday, March 25, 2021

உன்னிடம் மயங்குகிறேன் - 11

 

 

    தோளுக்குமேல் வளர்ந்தாலும் எந்தவொரு விஷயத்திலும் தன்  சொல்லைத்தட்டாத, தன்மேல் தனி பாசமும் மரியாதையும் வைத்திருக்கும் மகனின் கேள்விக்கு பதில் சொல்லும்முன், அவனை நெஞ்சார அணைத்துக்கொண்டார் சுகுமாரன்.

வசந்தாவிற்கு அவன் என்றும் குழந்தை தான். அவன் தலையில் எண்ணெய் வைத்துவிடுவது , சரியாக துவட்டாத ஈரத்தலையை துவட்டி விடுவது , மகன் டிவி பார்த்துக்கொண்டிருந்தால் அவனை தொந்தரவு செய்யாது சாப்பாடு ஊட்டிவிடுவது, அவ்வப்போது செல்லமே தங்கமே என்று கொஞ்சுவதுமென வசந்தா இன்னமும் அவனை குழந்தையாகத்தான் பார்ப்பாள். ஆனால் சுகுமாரன் அவனை ஒரு சக நண்பனை நடத்துவது போலத்தான் நடத்துவார். "தம்பி"  என்று வாஞ்சையுடன் அழைப்பவர் அவனோடு அரசியல், பொருளாதாரம், பன்னாட்டு வணிகம் என அனைத்தையும் விவாதிப்பார்.

அரவிந்தனும் அம்மாவிடம் அவளுக்கு ஏற்றாற்போல் குழந்தையாகவும் சுகுமாரனிடம் பெரிய மனித தோரணையுடன் பேசுவதும் என பழகிவிட்டிருந்தான். அன்று தன் தந்தை சற்றே மனம் தடுமாறி தன்னை அணைத்துக்கொண்டதும் அவனுக்கு தெளிவாக புரிந்தது எதோ ஒன்று அவர் மனதை அழுத்திக்கொண்டிருக்கிறது என்று.

அவனும் ஆதரவாக அவரை அணைத்துக்கொண்டு "அப்பா, எதுவா இருந்தாலும் நான் இருக்கேன் உங்களுக்கு. தைரியமா சொல்லுங்க" என்றான்.

மெதுவாய் அவனை விடுவித்துவிட்டு "தம்பி.. போன வாரம் வரை உங்க கல்யாணம் என்ன ஆகுமுன்னு நானும் அம்மாவும் ரொம்ப யோசனையா இருந்தோம்.. உன் அம்மா வேண்டாத கடவுள் இல்ல.. எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சி நாமளும் செத்து பொழச்சி வந்துட்டோம். எல்லாரோட சம்மதத்தோட உங்களுக்கு நிச்சயம் பண்ணற வரைக்கும் வந்திட்டோம்.. இன்னைக்கு காலையில ஜோசியர் வந்து உங்க ரெண்டு பேரோட ஜாதககத்தை பார்த்து பொருத்தம் இருக்குன்னு சொல்றவரைக்கும் நானும் அம்மாவும் டென்ஷனாதான் இருந்தோம். அவர் நல்ல வார்த்தை சொன்னதும் எங்களுக்கு நிம்மதியா இருந்திச்சி.. ஆனா அந்த நிம்மதி எனக்கு ஒரு மணிநேரம் கூட நிலைக்கலப்பா.. ஜோசியர்  கெளம்பி கொஞ்ச நேரத்துக்கெல்லாம்  உங்க மணிமாமாக்கு ஒரு போன் வந்திச்சி.. அது ஜோசியர் கிட்டருந்துன்னு தெரிஞ்சதும் அவன் மனசுக்கு சரியாபடலை போல .. தனியா போய் அவர் போன் எடுத்து கேட்டதுக்கு ‘ஒரு முக்கியமான விஷயம்.. நீங்க மட்டும் உடனே என் வீட்டுக்கு வாங்க’ன்னு சொல்லியிருக்காரு.. மணிமாறன் என்கிட்ட மட்டும் விஷயத்தை சொல்லி நானும் அவனும் சேர்ந்தே ஜோசியர் வீட்டுக்கு போனோம்..

ஜோசியர் ரொம்ப தயங்கிக்கிட்டே "மணிமாறன் தம்பி... நான் உங்க குடும்பத்து மேல ரொம்ப மரியாதை வச்சுருக்கேன்.. உங்க அப்பாவும் அம்மாவும் என்னை கலந்துக்காம எந்த ஒரு நல்ல காரியமும் பண்ண மாட்டாங்க.. என்மேல அவங்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை.  இதெல்லாம் உங்களுக்கே தெரியும்.. ஆனா இத்தனை வருஷம் இல்லாம இன்னைக்கு அந்த நம்பிக்கைய பொய்யாக்கிட்டேன்.. ஏன்னா நான் என்ன சொல்வேனோன்னு உங்க எல்லாரோட முகத்துல இருந்த பதட்டம், அதைவிட அந்த சின்னசிறுசுங்க முகத்துல தெரிஞ்ச பயம் இதெல்லாம் பாத்துட்டு பொருத்தம் நல்லா இருக்கு கல்யாணம் பண்ணலாம்னு சொல்லிட்டேன்.. ஆனா பொருத்தங்கள்ல முக்கியமானது தம்பதியருக்குள்ள இருக்குற ரஜ்ஜு பொருத்தம்.. அது இவங்க ஜாதகத்துல இல்ல.. ரஜ்ஜு பொருத்தம் இல்லன்னா ஒருத்தரயொருத்தர் சரியாய் புரிஞ்சிக்காம நிறைய பிரச்சனைகள் வரலாம்.. முக்கியமா மற்ற பெண்களால் இவங்களுக்குள்ள பிரிவு வரலாம்.. அதனாலதான் பொதுவா இந்த மாதிரி ஜாதகங்களை சேக்க மாட்டாங்க..மத்தபடி தனித்தனியா பாத்தா ரெண்டு பேரு ஜாதகமும் நல்ல ஜாதகம்தான். எனக்கு எல்லாரையும் வச்சிக்கிட்டு சொல்ல முடியல.. நீங்க பக்குவமா வீட்ல பேசி இவங்க ரெண்டு பேருக்கும் வேற இடம் பாக்கறது நல்லது "ன்னு முடிச்சார்.

எனக்கும் மணிமாறனுக்கும் நெஞ்சே வெடிக்கறமாதிரி இருந்திச்சி.. அவருகிட்ட எதாவது பரிகாரம் பண்ணா சரியாகுமான்னு கேட்டோம்..அவரு அதுக்கு பரிகாரம் எல்லாம் நம்மள சமாதானம் படுத்திக்கத்தான் பண்றது.. மத்தபடி நடக்கறது விதிப்படிதான் நடக்கும்னு கைய விரிச்சிட்டாரு..

மனசு ரொம்ப பாரமாகி வீட்டுக்கு வந்து பாத்தா வீட்ல எல்லாரும், குறிப்பா காவ்யா ரொம்ப சந்தோசமா சிரிச்ச முகத்தோட எங்களை மதியசாப்பாடு சாப்பிட கூட்டிட்டு போனா.. அவளோட அப்பாவுக்கும் வருங்கால மாமனாரான எனக்கும் அவ கையாலேயே பாசமா பறிமாறுனா.. அந்த முகத்துல சிரிப்பு காணாம போறது என்னால நினைச்சி கூட பாக்க முடியல.. சாப்பிட்டு முடிச்சதும் மணிமாறனை தனியா கூட்டிட்டு போய் இந்த விஷயத்தை பத்தி வீட்டுல யார்கிட்டயும் சொல்ல வேணாம்.. நாம முடிவு பண்ணது பண்ணதாவே  இருக்கட்டும்.. கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு கல்யாணத்த நடத்துவோம்ன்னு சொன்னேன். அவனும் சரின்னுட்டான். ஆனா எனக்கு மனச உறுத்திக்கிட்டே இருக்குப்பா.. உங்க அம்மாகிட்டேயும் சொல்ல முடியல.. அதான் நல்லதோ கெட்டதோ உன்கிட்ட சொல்லிடலாம்னு நெனச்சேன்.. நீ இத எப்பவும் மனசுல வச்சிக்கிட்டு காவ்யாகிட்ட அணுசரணையா நடந்துக்கோ.. உன் வாழ்க்கையில எதாவது பிரச்னைன்னா எங்களால தாங்க முடியாதுப்பா " என்று நீண்ட பெருமூச்சுடன் முடித்தார்.

அரவிந்தனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் சமாளித்துவிட்டு " அப்பா, இவ்ளோதானா.. நான் என்னவோன்னு பயந்து போய்ட்டேன்.. அஸ்ட்ராலஜி ஒரு சயின்ஸ் தான்.. ஆனா அத மட்டும் வச்சி வாழ்க்கைய முடிவு பண்ணமுடியாதுப்பா..உங்களுக்கே நல்லா தெரியும்.. காவ்யா என்னை எவ்ளோ புரிஞ்சி வச்சிருக்கான்னு.. என்மேல எனக்கு இருக்கற நம்பிக்கையைவிட அவளுக்குத்தான் அதிகமா இருக்கும். எனக்கும் அப்படித்தான் அப்பா. எங்களுக்குள்ள ஜோசியர் சொன்னமாதிரி எந்த மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கும் எப்பவும் வராது.. நீங்க எடுத்த முடிவுதான் சரி.. மனச போட்டு வருத்திக்காம நிம்மதியாக இருங்கப்பா.." என்று தந்தையை சமாதானப்படுத்தினான்.

அதன்பிறகு நிச்சயதார்த்த வேலை, வடிவும் பவித்ராவும் பண்ணிய கலாட்டாவென்று சுத்தமாக இந்த விஷயத்தை மறந்தேவிட்டிருந்தான்.

நிச்சயதார்த்தத்திற்கு முதல்நாள் இரவு  மீண்டும் மகனை இன்னொருமுறை கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளலாம் என்று அவனைத்தேடி மொட்டை மாடிக்கு வந்தவர் மகனும் மருமகளும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்ததும் திரும்ப எத்தனித்தார். சட்டென்று காவ்யாவின் விசும்பல் கேட்கவே, மாடிப்படிகளிலேயே நின்று என்ன காரணம் என்று தெரிந்ததுக்கொள்ள நினைத்தார்.

"என்னாச்சு காவ்யா.. அத்தை மறுபடி எதுவும் சொன்னாங்களா " என்று அரவிந்தன் காவ்யாவின் அருகில் வந்து பரிவுடன்  கேட்டான். “இல்ல அத்தான்.. இங்க பாருங்க " என்றுசொல்லிவிட்டு கையிலிருந்த அந்த பழைய புகைப்படத்தை காட்டினாள். கள்ளம் கபடம் அற்ற வெள்ளந்தி பெண்ணாய் வெட்கசிரிப்போடு வள்ளி அந்த புகைப்படத்தில் இருக்க "இது.. இதுதான் என் அம்மா .. வள்ளி அம்மாவாம் அத்தான்.. இப்போதான் அம்மா கூப்பிட்டு என்கிட்ட குடுத்தாங்க.. எனக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சதால வள்ளி அம்மாவையும் நான் பாக்கணும்னு அம்மா நெனச்சாங்களாம்.. அவங்க முன்னாடி என்னால என்னோட பீலிங்ஸ்ச காட்டிக்க முடியல.. பாவம் அம்மா.. அதனால சரிம்மான்னு  சொல்லி சும்மா வாங்கிட்டு வந்துட்டேன்.. ஆனா என்னால அழுகையை அடக்க முடியல அத்தான்.. வள்ளி அம்மா பாவம்ல .. எவ்ளோ இன்னொசெண்டா இருக்காங்க பாருங்க " என்று மீண்டும்  அழத்தொடங்கினாள்.

அவளது மனவேதனையை புரிந்தவனாய் அவளை நெஞ்சில்  சாய்த்துக்கொண்டு  "அழாதடா.. எங்க இருந்தாலும் உன் அம்மா உன்ன பார்த்துகிட்டு உன்ன bless பண்ணிட்டுதான் இருப்பாங்க.. நீ சந்தோசமா இருக்கறதுதானே அவங்களுக்கு பிடிக்கும்.. கண்ணை தொட.. நம்ம கல்யாணம் ஆன உடனே உங்க அம்மாவே நமக்கு வந்து பொண்ணா பிறப்பாங்க பாரு " என்றதும் அவனை இறுக அணைத்துக்கொண்டவள்  "இதுக்குதான் உங்கள பாக்கணும்னு நெனச்சேன் அத்தான்.. என்னோட எவ்வளவு பெரிய துக்கத்துக்கும் உங்க வார்த்தையிலே மருந்து இருக்கும் " என்றதும் "ஹ்ம்ம்.. வார்த்தையிலே மட்டுமா? " என்று அவளை வெட்கப்படவைத்தவன் “இந்த நம்பிக்கையை காலம் பூரா காப்பாத்துனாலே போதும் .. I will be a successful husband" என்று சிரித்தபடியே அவளை அணைத்துக்கொண்டான்.

தனக்கு வேதனை தரும் எந்த விஷயத்தையும் உடனே அரவிந்தனிடம் பகிர்ந்து கொண்டால் தனக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று தன் மகன்மேல்  முழு நம்பிக்கை வைத்திருக்கும் மருமகளுக்கும் அவளது மனமறிந்து நடந்துகொள்ளும் மகனுக்கும் இடையே புரிதலில் பிரச்சனை வருவது சாத்தியமே இல்லை என்று நம்பிக்கை வந்ததும் முகத்தில் புன்னகை பூக்க கீழிறங்க போனவர் "மாமா .. எப்போ வந்தீங்க.. சாரி மாமா.. அத்தானை பாக்க வந்தீங்களா .. மேலதான் இருக்காரு கூப்பிடவா"என்று காவ்யாவின் குரல் கேட்டு நின்றார்.

"இல்லம்மா.. தூக்கம் வரல.. காலாற மாடில நடக்கலாம்னு வந்தேன்.. நீ போய் தூங்கும்மா" என்று அனுப்பிவிட்டு மகனிடம் வந்தார். மகனை பார்த்து புன்னகைத்துவிட்டு "ரொம்ப சந்தோசமா இருக்குப்பா.. காவ்யா உன்னை ரொம்ப நேசிக்குறா.. காதலும் கல்யாண வாழ்க்கையும் வெறும் சந்தோசமா கொண்டாட மட்டும் இல்ல.. ரெண்டு பேர்ல யாருக்கு எந்த கஷ்டம் வந்தாலும் நமக்குன்னு ஒருத்தர் இருக்காங்க. நம்மள எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டாங்கங்கிற நம்பிக்கைதான் அடித்தளம். அந்த நம்பிக்கை என் மருமகளுக்கு உன்மேல இருக்குப்பா.. இதுக்கு மேல என்ன வேணும். ரெண்டு பெரும் சந்தோசமா இருப்பீங்க..ஆனா ஒண்ணு மட்டும் மறந்துராதப்பா.. காவ்யா எந்த அளவுக்கு உன்மேல பாசமா இருக்காளோ அதே அளவு பொசசிவாவும் இருப்பா.. அத மனசுல வச்சிக்கிட்டு பாத்து நடந்துக்கோ " என்று சொன்னது அவன் காதில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருந்தது. அப்பா சொன்னது சரிதான்.. காவ்யாவிற்கு பொஸசிவ்நெஸ் அதிகம்தான்.. பவித்ரா தன் தோளை பிடித்துக்கொண்டு அவளது செருப்பின் பக்கிள்ஸ் போட்டதற்கே தாங்க முடியாமல் அழுதவள் ஆயிற்றே.. என்று காவ்யாவை நினைத்து சிரித்துக்கொண்டவன், வீடு வந்ததும் காரை பார்க் செய்துவிட்டு வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினான்.

கதவைதிறந்தவள், பளிச்சென்று குளித்து அழகிய பிங்க் சல்வாரில் தேவதையாக மின்ன, அவனை அத்தனை சீக்கிரம் எதிர்பாக்காதவள் முகத்தில் ஆச்சர்யம் அழகாய் தெரிய "அத்தான் நீங்களா.. " என்று சொல்லி வாய்மூடுமுன், அவள் சொல்ல சொல்ல கேட்காமல் அவளை அலேக்காய் தூக்கி சுற்றியபடியே உள்ளே வர அங்கே சோபாவில் கயல்விழி மற்றும் அவளது குழந்தைகள், இன்னும் நான்கைந்து பெண்கள் அவர்களது குழந்தைகள் என்று ஒரு பெரிய கூட்டமே அமைதியாய் அமர்ந்து செய்வதறியாது அவர்களை பார்த்துக்கொண்டிருந்தது. இரு கைகளில் அவளை ஏந்தியவாறு இறக்கிவிடவும் தோணாமல் வந்தவர்களை பார்த்து ஸ்தம்பித்து போய் நின்றான் அரவிந்தன். வெட்கம் தாங்காமல் கைகளால் முகத்தை மூடியபடி தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள் காவ்யா.

 

1 comment:

  1. Interesting... Eagerly waiting for the next episode

    ReplyDelete

உன்னிடம் மயங்குகிறேன் - 15

    அரைமணி நேரத்தில் வீடு திரும்பியவன் அவளது முகத்தை நேருக்குநேர் காணும் சக்தியில்லாமல் "காவ்யா.. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்...