Wednesday, March 10, 2021

உன்னிடம் மயங்குகிறேன் - 9

பார்ட்டி முடிந்ததும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு அரவிந்தனும் காவ்யாவும் கிளம்பினர். வழிநெடுக அரவிந்தன் காரின் ஸ்பீக்கரில் ஒலித்த ரம்மியமான பாடலை பலமாய் பாடிக்கொண்டும் காவ்யாவை அவ்வப்போது பார்த்து சிரித்துக்கொண்டும் கார் ஓட்டிக்கொண்டிருக்க, காவ்யா மனம் முழுதும் மோனாவை சுற்றியே வந்து கொண்டிருந்தது.  அவனைப்பார்த்து அவ்வப்போது புன்னகைத்தாலும் உள்ளுக்குள் மோனா பேசியதையே அசை போட்டுக்கொண்டிருந்தாள்.

நிஜமாகவே மோனா அரவிந்தனை விரும்பியிருக்கிறாள் என்பது அவளுக்கு புரிந்தாலும் அடிப்படையில் அவளிடத்தில் நல்ல மனம் இல்லை என்றும் தெளிவாக தெரிந்தது.

இருந்திருந்தால் இவர்களை பார்த்ததும் மனம் வலித்தாலும் மனதார காதலித்தவனை பற்றி இழிவாக பேச எப்படி முடியும்.. இதே அத்தானை நான் திருமணம் செய்ய முடியாமல் போயிருந்தாலும் அவரை பற்றி என்னால் இப்படி தாழ்வாக நினைக்க முடியுமா? உயிரே போனாலும் என்னால் முடியாது..

ஹ்ம்ம் .. ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி.. ஆனாலும் அவள் கணவனை பற்றி சொல்லும்போது அதில் என்னை வெல்ல வேண்டும் என்ற கர்வம் மட்டுமே இருந்ததேயன்றி மகிழ்ச்சி இல்லையே .. நெடுநேரம் யோசித்தவள் பின் தன்னையே  கண்டித்துக்கொண்டாள்.

இதில் நானோ அத்தானோ செய்வதற்கு ஒன்றும் இல்லை.. ஒரு வகையில் மோனா அப்படி பேசியது கூட நல்லதற்குத்தான்.. அத்தானை பேசியது கோபத்தை வரவைத்தாலும் அவளது மேலோட்டமான காதல் தன்னுடைய குற்ற உணர்ச்சியை குறைத்தது போலிருந்தது அவளுக்கு. எப்படி பார்த்தாலும் அத்தானுக்கு ஏற்றவள் நான் தான்.. என்னைப்போல் அவரை யாரும் நேசிக்க முடியாது என்று எண்ணிக்கொண்டவள்,  பக்கவாட்டில் திரும்பி அவனது சிரித்த முகத்தை ரசித்துக்கொண்டே வந்தாள்.

மறுநாள் காலை அதிகாலையிலேயே எழுந்தவள் வழக்கம் போல வேலைகளை பரபரப்போடு செய்து முடித்தாள். அன்று அரவிந்த் புது ப்ராஜெக்ட்டில் அதுவும் புது ஆபிசில் சேர வேண்டும் என்பதால் காலையிலே டிபன் செய்து, லஞ்சும் பேக் செய்திருந்தாள்.

அரவிந்த் குளித்து விட்டு வருவதற்குள் அவனது உடைகளை அழகாய் அயர்ன் செய்து கொண்டிருந்தவளை, ரசித்து பார்த்தவன் பின்புறமாய் அவளை அணைத்துக்கொண்டு,

"ஹே காவ்யா.. இதெல்லாம் நான் பண்ணிக்க மாட்டேனா? இத்தனை வருஷம் நான் தானே பண்ணிக்கிட்டேன்? கல்யாணம் ஆனதும் எல்லாமே என் மனைவி தான் செய்யனும்னு நினைக்கிற சராசரி ஆம்பள நான் இல்லன்னு உனக்கு தெரியுமில்ல ?" காது மடல்களில் கிசுகிசுத்தவனை திரும்பி காதலுடன் பார்த்தவள்,

"அத்தான், இதெல்லாம் உங்களுக்கு பண்றது எனக்கு எவ்வளவு சந்தோசத்தை கொடுக்குது தெரியுமா? எப்பவும் என் மனச புரிஞ்சிகிட்டு என்ன எங்கேயேயும் விட்டுக்கொடுக்காம எனக்காக எதுவும் செய்யற என் அத்தானுக்கு நான் இதுகூட செய்ய மாட்டேனா?"  என்றாள்.

"ஹ்ம்ம்.. சரிங்க பொண்டாட்டி.. அப்பறம் நான் சொன்னதெல்லாம் மறந்துடாதடா.. எதுன்னா எனக்கு கால் பண்ணு.. உன் போன்ல என் செல் போன் நம்பர், கயல் அக்கா நம்பர், விவேக் நம்பர், திலீப் நம்பர், ரகு நம்பர் அப்பறம் ஷோபா நம்பர் எல்லாத்தையும் சேவ் பண்ணியிருக்கேன். அப்பறம் நம்ம வீட்ல எல்லாரோட நம்பர்ஸ் கூட சேவ் பண்ணிட்டேன். அதுதவிர உன்னோட பிரெண்ட்ஸ் நம்பர்ஸ் வேணும்னா பழைய போன்ல இருந்து இதுல சேவ் பண்ணிக்கோ.. நான் ஆபீஸ் போனதும் என் டெஸ்க் நம்பர் பாத்துட்டு சொல்றேன் அதையும் சேவ் பண்ணிக்கோ.. சரியா " என்று அவளுடைய புத்தம் புது ஐ போன் 12 ஐ கையில் கொடுத்து விட்டு கிளம்ப ஆரம்பித்தான்.

இன்று முதல் அவன் ஆபீஸ் செல்வதால் அவளுக்கு தேவையான அனைத்தையும் ஒன்று விடாமல் நேற்று இரவே சொல்லி முடித்தவன் சற்றே உள்ளுக்குள் கலங்கத்தான் செய்தான். அவனும் வீட்டில் இல்லையென்றால் தனிமையில் எப்படித்தான் பொழுதை கழிப்பாளோ.. பாவம். வீடு முழுக்க ஆட்களோடு இருந்தவளுக்கு இது பெரும் தண்டனைதான். தினமும் ஆபீஸ் முடிந்து சீக்கிரம் வந்துவிட வேண்டுமென்று நினைத்துக்கொண்டான்.

பார்மல் உடையில் அதுவும் முதல் நாள் என்பதால் ப்ளேசர்(Blazer) அணிந்து ஜம்மென்று வந்த நின்ற கணவனை கண் கொட்டாமல் பார்த்தவளை கண்டு அரவிந்தனுக்கு மெல்லிய வெட்கம் எட்டிபார்க்க "அத்தான், என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. ரொம்ப அழகா இருக்கீங்க.. " என்றவள் அவனது உடை கலையாமல் மெலிதாக அணைத்துக்கொண்டாள்.

"Thank you பொண்டாட்டி.. இந்த எக்ஸ்ட்ரா அழகெல்லாம் நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் வந்ததுதான்.. நேத்து பார்ட்டில கூட என் பிரண்ட்ஸ் இதைத்தான் சொன்னாங்க.. எல்லாம் நீ எங்கூட இருக்குற சந்தோசம் தான் "என்று அவளை முத்தமிட நெருங்கியவனை தடுத்து, "அத்தான், ப்ளீஸ் ... வாங்க சாமி கும்பிடலாம்.. அப்பறம் அத்தை மாமாட்ட பேசணும்.. அப்பறம் சாப்பிட்டு கிளம்ப லேட் ஆய்டும்" என்று நாணத்துடன் அவனை விட்டு விலகினாள்.

பூஜை அறையில் சாமி விளக்கேற்றி கண்களை மூடி மனதார கடவுளை வணங்கிக்கொண்டிருந்தவளை ரசித்துக்கொண்டவன், தானும் கண்களை மூடி மனமுருக வேண்டிக்கொண்டான்.

"கடவுளே, இந்த தேவதை என் வாழ்க்கையில் வர எத்தனை ஏங்கினேன்.. இன்று இவள் என் மனைவி.. எல்லாம் கனவு போல் இருக்கிறது.. இந்த கனவு கலைந்து விடக்கூடாது.. நானும் இவளும் நூறு வருடம் சேர்ந்து வாழ வேண்டும்.. " என்று சொல்லிக்கொண்டவன் மனதில் திடீரென்று தன் தந்தை சுகுமாரன் நிச்சயத்திற்கு முதல் நாள் சொன்னது படம் போல் ஓடியது. சற்றே மனம் சஞ்சலப்பட்டாலும் ‘என்ன இது.. நான் எப்போதிருந்து இதையெல்லம் யோசிக்க ஆரம்பித்தேன்.. அப்பா சொன்னபோது அவரை சமாதானப்படுத்தி அவர் பயத்தை தெளிய வைத்த நானா இப்படி யோசிப்பது.. நோ"  என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டவன்,

"அத்தான்.. " என்று காவ்யா அழைத்ததில் நிகழ்காலத்திற்கு வந்தவன் அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு "ஓகே.. வீட்டுக்கு கால் பண்ணலாமா?" என்றுவிட்டு வசந்தா எண்ணை அழைக்க, வழக்கமான விசாரிப்புகளை தொடர்ந்து அம்மா அப்பாவிடம் ஆசியும் வாங்கி கொண்டான் அரவிந்தன். சுகுமாரன் மட்டும் தனியாக "தம்பி.. டிரைவ் பண்றப்போ பாத்துப்பா.. சொன்னதை மறந்துடாத" என்று அழுத்தி சொல்லவும் அரவிந்தனும் அப்பா சொல்வது புரிந்தவனாக "ஹ்ம்ம் சரிப்பா.. I will be careful. பயப்படாதீங்க" என்று விட்டு இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தான்.

மணிமாறன் நம்பருக்கு அழைத்து வீட்டில் தாத்தா பாட்டி மற்றும் அனைவரிடமும் சொல்லிவிட்டு போனை வைத்தவர்கள், இருவருமாய் சேர்ந்து காலை உணவை முடித்தனர்.

மணி 8:30 ஆகியிருக்க, லேப்டாப் மட்டும் லஞ்ச் பேக் சகிதமாய் கிளம்பியவன் அவளின் நெற்றில் முத்தமிட்டு, கார் பார்க்கிங் வரை கூடவே வந்தவளை "பத்திரமா இருடா.. நான் ரீச் பண்ணிட்டு போன் பண்றேன்" என்று காரை கிளப்பினான்.

அத்தான் செல்வதையே ஆசையாய் பார்த்துக்கொண்டிருந்தவள் கார்  கண்களை விட்டு மறையும் வரை இருந்துவிட்டு பின் வீட்டுக்குள் சென்று கதவை சாத்தினாள்.

காலையில் அவரச கதியில் வேலை செய்ததால், களேபரமாக இருந்த வீட்டை ஒழுங்கு படுத்திவிட்டு கையில் காபியுடன் சோபாவில் அமர்ந்தவள் அரவிந்தனின் கால் வந்ததும் எடுத்து ஆன் செய்தாள். "காவ்யா, ஆபீஸ்க்கு வந்துட்டேன்.. இப்போவே ஒரு மீட்டிங் இருக்கு.. டாம் அண்ட் அவரோட பாஸ் கூட.. சோ முடிச்சிட்டு கால் பண்றேன்.. நீ பத்திரமா இரு.. வீட்டுக்கு கால் பண்ணி பேசு ..உன்ன தனியா விட்டுட்டு வந்தது மனசுக்கு என்னமோ போல இருக்கு " என்று அவசரமாய் சொன்னவனை "அத்தான்.. ப்ளீஸ் என்னைப்பத்தி கவலை படாதீங்க.. நீங்க உங்க வேலைல கான்செண்ட்ரட் பண்ணுங்க.. நான் பாத்துக்கிறேன்.. நீங்க பிரீயா இருக்கறப்போ கால் பண்ணுங்க " என்றுவிட்டு போனை வைத்தாள்.

வேலை நேரத்திலும் தன்னை பற்றி யோசிக்கும் தன் அத்தானின் அன்பில் நெகிழ்ந்தவள் 'கடவுளே ஏன் எனக்கு எல்லாமே நல்லதாக செய்து கொண்டிருக்கிறாய்? என்னை சுற்றி நல்லவர்களையே படைத்திருக்கிறாய்.. என் ஆசை அத்தானை எனக்கே கொடுத்திருக்கிறாய்.. என்னை பெற்றவளை என்னிடமிருந்து பறித்துக்கொண்டதற்கு பரிகாரம் செய்கிறாயா?"  என்று நினைத்துக்கொண்டவள் திடீரென்று நினைவு வந்தவளாக தன் பெட்டியில் வைத்திருந்த வள்ளியின் புகைப்படத்தை எடுத்து ஆசை தீர பார்த்தாள்.

'என் அம்மா.. எத்தனை அழகு.. எத்தனை வெகுளித்தனமான பார்வை.. என்னை பார்த்ததும் என்ன நினைத்திருப்பாள்.. சந்தோசப்பட்டிருப்பாள்.. அதே நேரம் தன் குழந்தையை விட்டு பிரியப்போகிறோம் என்பதை நினைத்து கலங்கியும் இருப்பாள்' என்று நினைத்த மாத்திரத்தில் காவ்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது.  மெலிதாக "அம்மா.. அம்மா.." என்று வாய் விட்டு அழைத்தவளை புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தாள் புகைப்படத்தில் இருந்த வள்ளி.


6 comments:

  1. Lovely episode. Kavya has a golden heart 💜 you have very well described The love , bonding and care between kavya and aravind 💖 Awesome can’t wait for next👏🏻👍

    ReplyDelete
  2. Lovely part ka❤️love and caring of Aravind and kavya superb ka🥰🥰

    ReplyDelete
  3. Wonderful... loved your narration akka

    ReplyDelete

உன்னிடம் மயங்குகிறேன் - 15

    அரைமணி நேரத்தில் வீடு திரும்பியவன் அவளது முகத்தை நேருக்குநேர் காணும் சக்தியில்லாமல் "காவ்யா.. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்...